இது நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில், 'ரத்தின சபை'யாகத் திகழ்கிறது.
திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் சாலை வழித்தடத்தில் அமைந்துள்ளது திருவாலங்காடு திருத்தலம்.
இத்திருக்கோயில் திருநாவுக்கரச பெருமான், சம்பந்தப் பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமாகும்.
திருக்கோயிலின் மூலவர் வட ஆரண்யேஸ்வரர், தேவர் சிங்கப்பெருமான் என்று அழைக்கப்படுகின்றார். தாயார் வண்டார் குழலி, தலவிருட்சம் ஆலமரம், தீர்த்தம் முக்தி தீர்த்தம்,
இறைவனால், 'அம்மையே!' என்று அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜப் பெருமானின் திருவடியின் கீழிருந்து சிவபெருமானின் ஆனந்த இன்ப வெல்லத்தில் நிலைத்திருக்கும் திருக்கோயில் இக்கோயில் ஆகும்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது 'காளி சக்தி பீடமாகும்'. திருவாலங்காட்டிலுள்ள நடராஜர் தாண்டவம் 'ஊர்த்துவ தாண்டவம்' என்று சொல்லப்படும். வலது காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல தனது பாதத்தைச் செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல், உடலின் முன் பக்கத்தில் முகத்திற்கு நேராகப் பாதத்தைத் தூக்கி நடனமாடுகிறார். இது அற்புதமான நடனக் காட்சியாகும். தனது எட்டு கரங்களுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இத்திருவுருவத்தைக் காண அழகு.
கிழக்கில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சன்னதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலது புறம் ஒரு சிறிய சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் அருள்மிகு முருகப்பெருமான் அருட்காட்சி தருகிறார்.
உள்ளே நுழைந்தவுடன் வலது புறம் நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் தான் நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் மூன்று நிலைகளை உடைய இரண்டாவது கோபுரம்.
இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தை ஒட்டிய சுவரின் மேல் இடது புறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலது புறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதைச் சிற்பங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இரண்டாவது சுற்றுப் பிரகாரம்.
வலது புறத்தில் இத்தலத்து இறைவி 'வண்டார் குழலியம்மை' சன்னதி தெற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது. அதற்கு நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
கருவறையில் இறைவன் வட ஆரண்யேஸ்வரர் சுயம்புலிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். மூலவரைத் தரிசிக்க உள்பிரகாரத்தில் நாம் செல்லும் பொழுது சூரியன், அதிகார நந்தி, விஜயராகப் பெருமாள் தேவியருடன் சண்முகர், அரோக வீரபத்திரர், சப்தகன்னியர், நால்வர், காரைக்கால் அம்மையார், கார்க்கோடகன், மூஞ்சி கேசவ முனிவர், பதஞ்சலி, அனந்தர், சண்டேச அணுக்கிரகர், என்வகை விநாயகர் உருவங்கள் ஆகிய சன்னதிகள் அருட்காட்சி தருகின்றன.
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகப் பெருமானும், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்கா பரமேஷ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாக அமையப்பெற்றுள்ளது. பஞ்சபூத தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக இங்கே அமையப்பெற்றுள்ளன. 'சகஸ்ர லிங்கம்' தரிசிக்கத்தக்கது.
சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாப ஹரீஸ்வரலிங்கம் முதலிய சன்னதிகளும் அமைந்துள்ளன. பைரவர் தனது வாகனமின்றி அருட்காட்சி தருகின்றார். ஆருத்ர அபிஷேக மண்டபம் ரத்தின சபை வாயிலை அடுத்து தெற்கு நோக்கி நிலையில் அம்பாள் சன்னதி உள்ளது. அம்பிகை நீண்ட திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறார்.
இச்சன்னதியில் சிற்பக்கலை அழகுடன் கல்தூண்கள் அமையப்பெற்றுள்ளன. ரத்தின சபையில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவ திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்கால் அம்மையார் ஆகியோரின் திருமேனிகள் அருகில் உள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் காட்சி தருகின்றன. ரத்தின சபையின் விமானம் செப்பு தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் காணப்படுகிறது.
இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். முன்னொரு காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி நடனம் செய்தபடியால் இத்தலத்து இறைவன் 'வட ஆரண்யேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார்.
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்துள்ளனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவபெருமானிடமும் பார்வதியிடமும் சென்று முறையிடுகின்றனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியைத் தோற்றுவித்து அரக்கர்களை அழித்துவிட்டு அவளையே ஆலங்காட்டிற்குத் தலைவி ஆக்குகிறார்.
அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி பல கோரச் செயல்களைப் புரிய, இதனால் முஞ்சிக்கேச கார்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை வந்து அடைகிறார். அவரைக் கண்ட காளி, நீ என்னுடன் நடனமாடி வெற்றி பெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம் என்று சொல்ல, சிவபெருமானும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார்.
அப்போது தன் காதிலிருந்த ஒரு மணியைக் கீழே வைத்து, பின்னர் அதை தன் இடது கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்திக் கொள்ள இதனைக் கண்ட காளி இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என்று தன் தோல்வியை ஒத்துக் கொள்கிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி என்னை அன்றி உனக்குச் சமமானவர் வேறு யாரும் கிடையாது எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள் முதலில் உன்னை வழிபாடு செய்த பின்னர் என்னை வழிபட்டால் தான் முழுப்பயணம் கிடைக்கும் என்று வரமளிக்கிறார்.
அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு இங்கே அருள்பாலித்து வருகிறாள்.
இத்திருத்தலத்தில் இறைவனின் திருக்காலடியில் தான் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்ந்து வருகிறார். நடராஜர் சன்னதிக்கு எதிரே காளியின் சன்னதி அமையப்பெற்றுள்ளது. வட ஆரண்யேஸ்வரரை ஐப்பசி மாசம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும்.
என் வாழ்வில்...
எனக்கு 'கிருஷ்ணரத்னம்' என்று பெயர் சூட்டியது எனது அப்பா வழி பாட்டி பொன்னம்மாள்கிருஷ்ணசாமி அவர்கள்.
ஒருநாள் அறிமுகமில்லாத ஒருவர், என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அப்போது எனக்கு வயது 30. திருமணம் ஆகவில்லை. ஏனோ அதைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. சொன்னேன்.
"உன் பெயரில் 'ரத்னம்' என்று வருவதால், நீ திருவாலங்காடு சென்று சிவபெருமானை வழிபட வேண்டும். காரணம், உன் பெயரிலும் ரத்னம் இருக்கிறது, சிவபெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றான அதுவும் 'ரத்ன சபை'. அங்கு இரண்டு ஏழைகளுக்கு உணவளித்து அவர்கள் வாழ்த்தைப் பெறு. உனக்கு திருமணம் நடைபெறும்" என்றார்.
நான் அதுவரை திருவாலங்காடு சென்றவனில்லை.
எங்களது அம்மா கமலாவீரராகவன் அவர்களிடம் இந்த விஷயத்தை சொன்னேன். அவர், இரண்டு பேர் வயிறார சாப்பிடும் அளவு, புளியோதரை செய்தார். அவற்றை வாழையிலையில், இரண்டு பொட்டலமாகக் கட்டி எடுத்துக் கொண்டோம்.
திருவாலங்காடு ரத்னசபையில் சிவபெருமான் வரலாறைச் சொல்லி சிவாச்சாரியார் எங்களை தரிசிக்கச் செய்தார். ரத்னசபையின் அதிபதியை நன்கு வழிபட்டோம்.
வெளியே வந்த எங்களுக்கு அதிர்ச்சி. அப்போது அது சிறிய ஊராக இருக்கவே, கோயில் அருகில் எந்த ஏழையும் அமர்ந்திருக்கவில்லை.
'எப்படி உணவு பொட்டலங்களைக் கொடுப்பது?' என்று நானும் அம்மாவும் டென்ஷனாகி விட்டோம்.
சோதனை தீர, இருவரும் மனதில் சிவபெருமானை வேண்டினோம்.
அது மதியவேளை. சொல்லி வைத்தது போல இரு ஏழைகள் வந்தனர். பசியின் ரேகை அவர்கள் முகத்தில் இருந்தது.
எங்களிடமிருந்து உணவு பொட்டலங்களை மகிழ்வோடு பெற்றனர். "நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்!" என்று மனதார வாழ்த்தினர்.
எனக்கும் அம்மாவிற்கும்
மனம் நிறைந்தது.
பிறகு, சில ஆண்டுகளில் எனக்கு திருமணம் ஆனது.
அதற்கு காரணம், அந்த ஏழைகள் வாழ்த்தியதே என்று எண்ணுவேன். அந்த வாழ்த்து, என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றானது.
நடனக் கலைகளில் தேர்ச்சி பெற விரும்பும் அன்பர்கள் வணங்க வேண்டிய திருத்தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. காளியை வழிபாடு செய்த பின்னர் மூலவரை வழிபட்டால் முழுப்பயன் கிடைக்கும்.
-வி.சி. கிருஷ்ணரத்னம்,
F1, மங்கள் ஃபிளாட்ஸ்,
(எஸ்.எஸ்.வி. ஹாஸ்டல் அருகில்)
ஆர்.எம்.ஆர். அவென்யூ,
28,
ஞானாம்பிகை தெரு,
காட்டாங்குளத்தூர் & போஸ்ட்
செங்கல்பட்டு மாவட்டம்,
பின் - 603 203.