எங்கள் கீழப்பாவூர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள நரசிம்மர் கோயில் புகழ்பெற்றதாகும்..
திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கீழப்பாவூர் பேரூராட்சியின் கிழக்கில் 14 கிமீ தொலைவில் ஆலங்குளமும், மேற்கில் 10 கிமீ தொலைவில் தென்காசியும், வடக்கில் 6 கிமீ தொலைவில் சுரண்டையும், தெற்கில் 15 கிமீ தொலைவில் கடையம் உள்ளது
கீழப்பாவூருக்கு வரலாற்றில் பாகூர் ஆன சத்திரிய சிகாமணி நல்லூர் என்றும் பெயருண்டு. இதன் பெரிய குளத்திற்கு நீர் வரும் சிற்றாற்று சித்திர வாய்க்காலுக்கு வீரராஜேந்திரன் வாய்க்கால் என்றும் ஒரு பெயருண்டு. இன்று வழங்கி வரும் கீழப்பாவூர் வரலாற்றில் மிகப் பழமையான ஒன்று ராஜராஜ சோழன் வழி வந்த சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருகபாலீஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்) இங்கு உள்ளது. இந்த ஆலயம் 11ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் அருகில் முனை எதிர் மோகர்கள் (போர் முனையில் ஆர்வம் கொண்டவர்கள்) கோட்டை உள்ளது.
14.18 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 148 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
கீழப்பாவூர் பெரியகுளம் பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் 54 ஏக்கர் 85 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்குளத்திற்கு தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து வருகிறது.இந்த பெரியகுளம் மூலம் சுமார் 1600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கீழப்பாவூர் நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலபட்டமுடையார்புரம் கிராமத்தில் 1500–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் மக்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. ஊரின் வடபுறம் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ளது குட்டியான்குளம். சிற்றாற்று பாசனம் மூலம் கடப்போக்கத்தி, மேலப்பாவூர் வழியாக கீழப்பாவூர் குளத்திற்கு தண்ணீர் வந்து, பின்னர் அங்கிருந்து நாகல்குளம் நிரம்புகிறது. அதன் பிறகு இந்த குளத்திற்கு தண்ணீர் வந்து சேர்கிறது. இந்த குளத்தை நம்பி பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
ஆலங்குளம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, வீ.கே.புதூர் போன்ற முக்கிய நகரங்களைச் சுற்றி 100-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம், அரிசி ஆலைகள் உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. இப் பகுதி சிறுவணிகர்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதி. இங்குள்ளோர் பலர் கேரளத்தின் பல பகுதிகளில் பாத்திரம், ஜவுளி வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல இப் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு அதிகளவில் காய்கனிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் அரிசி விநியோகமும் நடைபெறுகிறது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.ஆலங்குளம் வட்டத்தில் அமைந்த கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.
முன்காலத்தில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் மூலம் பாகு காய்த்து பனை வெல்லம் தயாரித்து இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் குடியிருந்து வந்ததால் இப்பகுதியை பாகு காய்த்ததால் பாகூர் என கூறி நாளடையில் பாவூர் என மாறி இரண்டு பகுதியாக இருந்ததால் கீழப்பாவூர் மற்றும் மேலப்பாவூர் என இரண்டு ஊர்களாக பிரித்து அதிக மக்கள் தொகையை கொண்ட கீழப்பாவூர் பேரூராட்சியாக உருவானது. நரசிங்கமூர்த்தி மேற்கு நோக்கி இருப்பதால் கேரள மாநிலம் மாவலிக்கரா கிராமத்தில் முன்னொரு காலத்தில் தீப்பற்றி எரிந்ததாகவும் கடவுள் மாவலிக்கரா மகாராஜாவிடம் கனவில் தோன்றி கிழக்கே கீழப்பாவூர் இருக்கும் நரசிங்கமூர்த்தி பார்வை இருப்பதால் அங்கு சென்று திருப்பணி செய்து கோவில் முன் தெப்பம் அமைத்து கொடுக்குமாறு அருள் புரிந்ததற்கிணங்க கேரள மகாராஜா இக்கோவிலில் திருப்பணி செய்து வெட்டிக் கொடுத்ததாக கல்வெட்டுகள் உள்ளது.
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகள் பழமையானது.
தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது.
தமிழ்நாட்டில் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார் நரசிம்மர். சுற்றிலும் வயல்கள், குளங்கள் நிறைந்து பசுமையாக உள்ளது. முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும். ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே.
கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார். சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகா விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர்.
இவர்களுடைய தவத்தை மெச்சிய பகவான் விஷ்ணு, "பொதிகை மலைச்சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடியபின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்மை வேண்டித் தவம் இயற்றுக" என்று கூறி மறைந்தார். அதன்படியே முனிவர்களும், தேவர்களும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர்.
அந்த தவத்தில் மகிழ்ந்த பகவான் மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர். பின்னர், இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.
இரண்ய கசிபுவை சிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம். இரண்யனை தன் மடி மீது கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து, நான்கு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்து, இரண்டு கரங்களால் குடலை உருவி மாலையாகப் பிடித்து, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் உக்கிரமாகக் காட்சி தருகிறார்.
கருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீர்ப்பற்றி எரிந்தது. இவரின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு பிரம்ம தேவன் லட்சுமியை அனுப்பி வைத்தார். இதனால் நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. இதனைக் குறிக்கும் வகையில் நரசிம்மரின் மார்பில் லட்சுமி பிரதிஷ்டையாகக் காணப்படுகிறார்.
சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அங்கு சென்று வழிபட பயந்தனர். பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர், பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்தசொரூபியாக மாறி விட்டார் என்றும் கூறுகின்றனர்.
பாவூரில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் குலத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருந்த ஒரு குழுவினர் வாழ்ந்தனர்.கீழப்பாவூரில் திருக்கபாலீச்சுரம் என்ற பெயருடன் திகழ்ந்த சிவன் கோயிலுக்கு இக்குழுவினர் பல கொடைகளைத் தந்தனர். அக்கோயில் தற்போது திருவாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது
திருவாலீசுவரர் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இக்கல்வெட்டுகளில் முனையெதிர் மோகர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வெங்கடாசலபதி கோயிலில் இருந்த மூன்று கல்வெட்டுகள் பற்றிய குறிப்பு 1917ஆம் ஆண்டில் மையத் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
கீழப்பாவூரில், இக்கல்வெட்டுகள் தவிர, பல இடங்களில் கல்வெட்டுத் துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன. இவை திருமால் கோயிலின் இடிபாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டனவாகத் தோன்றுகின்றன. இத்தகைய கற்கள் கொண்டு கட்டப்பட்ட நடைப்பாலம் ஒன்றும், வண்டிகள் செல்வதற்கான பாலம் ஒன்றும், கள ஆய்வில் கண்டறியப்பட்டன.
திருவாலீசுவரர் கோயிலுக்கு நேர் வடக்கே ஆபத்துக் காத்த அம்மன் என்ற பெயரில் சிறிய கோயில் ஒன்று இருப்பது தெரிய வந்தது. சுற்றிலும் வயல்வெளிகள் சூழ, கிணற்றின் மோட்டார் அறை போன்ற தோற்றத்தில் அமைந்த சிறிய கோயில் அது. ஆயினும் ஆபத்துக் காத்த அம்மன் என்ற பெயரும், சிவன் கோயிலுக்கு வடக்கில், ஊரின் வடவாயிற் செல்வியாக இத்தெய்வம் எழுந்தருளியிருப்பதும் கவனத்தை ஈர்த்ததால் இக்கோயில் ஆய்வு செய்யப்பட்டது.
கோயிலுக்கு வெளியே ஒரு மூலையில் கைகள் சிதைவுற்று, தலையும் தனியாக உடைந்த நிலையில், பழங்காலச் சிற்பம் (காளியின் கற்சிலை) ஒன்று காணப்பட்டது