எங்கள் ஊர் நிலக்கோட்டையானது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகும். நிலக்கோட்டை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320 மீட்டர் (1049 அடி) உயரத்தில் இருக்கின்றது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,197 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 9.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும் (தனி), திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளர். பூ பறித்தல், பூ தொடுத்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் மல்லிகை மற்றும் இதர மலர்களுக்கு என்று தனியாக வணிக வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது .
நிலக்கோட்டையில் பாளையக்கார மன்னர் கூளப்ப நாயக்கரால் கட்டப்பட்ட மிக பழமையான ஸ்ரீநரசிங்க பெருமாள் கோவில் உள்ளது . நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் புகழ் பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் கோவில் உள்ளது.
கி.பி 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர் நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நிலக்கோட்டையில் இயங்குகிறது.
நிலக்கோட்டை ஒன்றியம் கோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட செல்வ நகர், சந்தனமாதபுரம், இன்னாசி நகர், தாதகாப்பட்டி, கோட்டூர், நோட்டக்காரன்பட்டி, அப்பிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் தோட்ட குடியிருப்புகளிலும் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்கு கோடாங்கிநாயக்கன்பட்டி அருகேயுள்ள மூன்று கண்மாய் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரியூத்து ஊராட்சியில் பாலம்பட்டி, நூத்துலாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
நிலக்கோட்டை:வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அணைப்பட்டி வைகை ஆற்றை கடந்தால் குடிநீர் கிணறுகளுக்கு விமோசனம் கிடைத்து கிராமங்களில் தட்டுப்பாடு நீங்கும். அணைப்பட்டி வைகை ஆற்றில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்கள், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அம்மையநாயக்கனுார் பேரூராட்சிகள், ஒன்றிய பகுதிகளுக்கான குடிநீர் கிணறுகள் அமைந்துள்ளன.
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் சிறுநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், எத்திலோடு வழியாக மாலையகவுண்டன்பட்டி, பள்ளபட்டி, கொடைரோடு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி என 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
நிலக்கோட்டை அருகே கோவில்பட்டி பகுதி சாலை ஓரத்தில் வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது.
நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில். இந்த கோவிலுக்கு நிலக்கோட்டை பகுதி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பரிகாரங்கள் செய்ய வருவதால் இந்தக் கோவில் முக்கிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் இராணிமங்கம்மாள் ஆட்சி காலத்தில் அம்மையநாயக்கனூர் ஜமீன்தார் காமயசாமிநாயக்கர் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வைகையின் மணற்படுகையில் கூடாரம் அமைத்து ஓய்வெடுப்பது வழக்கம். அது போன்று ஒரு சித்ரா பௌர்ணமி அன்று இரவு ஓய்வெடுத்து கொண்டுருந்த ஐமீன்தார் காமயசாமிநாயக்கர் கனவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரசன்னமாகி தான் வைகை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தாழம் புதரில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாகவும் தனக்கு அந்த இடத்தில் ஆலயம் எழுப்பி வழிபட்டு வருமாறும் கூறி மறைந்தார்.
தற்போது இக்கோவில் பிரபலமான பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. மூதாதையர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காகத்திற்கு அன்னமிட்டு வழிபாடு செய்வது இன்று வரை ஆயிரக்கணக்கான பக்தர்களால் இந்த வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்திருக்கும் ஆற்றங்கரையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு தென் மாவட்டங்களில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அங்கு வசித்த நாடார் சமுதாயத்தினர் ஏராளமானோர் சுமார் 1850-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பஞ்சம் பிழைக்க நிலக்கோட்டை வந்ததாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் நிலக்கோட்டை பகுதி மக்கள் பிளேக் நோய், காலரா, அம்மை போன்ற நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதை அறிந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்த பெரியோர்கள் இந்த நோய் தாக்குதலுக்கு மாரியம்மனின் கோபம்தான் காரணம் எனக் கருதினார்கள். எனவே அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அப்போது முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஆரம்ப காலத்தில் மிகச்சிறிய அளவில் கோவிலை ஏற்படுத்தினார்கள். மேலும் கோவில் அருகே ஒரு தெப்பக்குளமும் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலின் ஒரு பகுதியில் பீடம் அமைத்து பொதுமக்கள் அம்மனை வேண்டி வணங்கி வந்தனர். அதன் எதிரொலியாக நிலக்கோட்டையில் ஏற்பட்ட நோய் தாக்குதல் விரைவாக குறைந்தன. அம்மனின் அருளால்தான் இந்த அற்புதங்கள் நடந்தது என்று நம்பிய நாடார் சமுதாயத்தினர் 1912-ம் ஆண்டு அந்தக் கோவிலில் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரையிலும் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிலக்கோட்டையில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடக்கிறது
நிலக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ஆகிய பகுதிகளில் பூ சந்தை செயல்பட்டு வருகிறது. நிலக்கோட்டை பூச் சந்தைக்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையக்கூடிய பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரள மாநிலத்துக்கும் பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.நிலக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் மூன்றாயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் கிலோ வரை மல்லிகைப் பூக்களை விவசாயிகள் சந்தைக்குக் கொண்டு வருகின்றனர். பூ வியாபாரிகள் வாங்கிச் சென்றதுபோக மீதமுள்ள மல்லிகைப் பூக்களை நிலக்கோட்டை, மேட்டுப்பாளையம் மருதூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் செயல்படும் தனியார் வாசனைத் திரவிய தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். நிலக்கோட்டையில் விளையும் மல்லிகைதான் மதுரை மல்லி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு புவிசார் குறியீடு பெற்றது.
திண்டுக்கல் பகுதியில் ராமகிரி, கன்னிவாடி, நிலக்கோட்டை, கொத்தப்புள்ளி, அம்மைய நாயக்கனூர், மங்களப்பள்ளி, வி.மேட்டுப்பட்டி, வேடசந்தூர், நரசிங்கபுரம் என ஒன்பது தலங்களில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இவற்றுள் மங்களப்பள்ளியில் சாந்த ரூபியாக நரசிம்மர் அருள்புரிகிறார்.
அறநிலையத்துறைக்குட்பட்ட இவ்வாலயம் அரசு ஆவணங்களில் லட்சுமி நரசிங்கப்பெருமாள் என்றே உள்ளது. லட்சுமி நரசிம்மருக்குப் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரம் அன்றும் காலையில் சுதர்சன ஹோமமும், கோபூஜையும் நடக்கின்றன. இங்கே நரசிம்மரை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால் மன அமைதி கிட்டும், சர்வரோக நிவாரணம் ஏற்படும். திருமணத் தடங்கல் நீங்கும். சந்தான பாக்கியப்பேறு வாய்க்கும். லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள தாடிக்கொம்பு என்னும் ஊரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மங்களப்பள்ளி அமைந்துள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நவாமரத்துப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, கோவில்பட்டிப் பிரிவில் இறங்கி 1 கி.மீ. மேற்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.கோடாங்கிப்பட்டி செல்லும் பேருந்தில் பயணித்து மன்னார்கோட்டையில் இறங்கி 1 கி.மீ. கிழக்கே சென்றும் இக்கோவிலுக்கு வரலாம்.