காலமெலாம் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்து உழைத்து ஓடாய் போன ஒரு ஒப்பற்ற தலைவனை, அந்த மகத்தான மாமனிதனை, அரசியல் ஞானியை, செயல் மறவரை, உண்மையின் உருவத்தை, சத்தியத்தின் சரீரத்தை, தன்னலமற்ற சீலரை, கரைபடியா கரத்தை, இவை அனைத்தும்;, ஒத்த பிம்பமாம் விளங்கிய விருதுப்பட்டி வீர வேங்கை பெருந்தலைவர் காமராசரை, இன்றைய இளைஞர்கள் கொஞ்சம், கொஞ்சமாக மறந்து வருகிற இந்த சூழலில், அவர் தம் பிறந்த நாளான இன்று நினைவு கூறுவது பொருத்தமென கருதுகிறேன்.
1903ஆம் ஆண்டு ஜீலை திங்கள் 15ம் நாள் விருதுபட்டியில், தேங்காய் வியாபாரி குமாரசாமி, சிவகாமியம்மை தம்பதியினருக்கு, ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில், ஒரு எளிமையான குடும்பத்தில், காமராஜர் பிறந்தார். தன் பேரனுக்கு பாட்டி பார்வதியம்மாள் தன் குல தெய்வமான, காமாட்சியின் பெயரை சூட்டினார். ஆனால் அன்னை சிவகாமியம்மாளோ, தன் பிள்ளையை செல்லமாக ராஜா என்றே அழைத்து வந்தார். தந்தை குமாரசாமியோ, காமாட்சி என்ற பெயரையும், ராஜா என்ற பெயரையும் இணைந்து காமராஜா… என்று அழைத்தார்.
1908ம் ஆண்டு சரஸ்வதி பூஜை நன்னாளன்று காமராஜருக்கு அக்கால வழக்கப்படி கைக்கு பூனும், காதுக்கு கடுக்கனும், கழுத்தில் செயினும், பட்டாடையும் அனுவித்து, தன் தாய்மாமன் கருப்பையா நாடார் தோளில் சுமந்து, பவழமணி பல்லக்கில் அமரவைத்து, விருதுப்பட்டியில் உள்ள நொண்டி வாத்தியார் வேலாயுதம் நடத்தி வந்த ஆரம்பப் பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு, மணலிலே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர். அதற்கு பிறகு காசுக்கடை தெருவில் உள்ள ஏனாதி நாயனார்; வித்யாசாலாவில் காமராசர் படித்தார். பின்பு, பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்ட ஷத்திரிய வித்யாலா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பிடியரிசிப் பள்ளிக் கூடம் என்றால், அந்த பள்ளியில் பயிலும், மாணவரின் குடும்பத்தினர் அந்த பள்ளிக்கு தினமும் ஒரு பிடி அரிசியை தானமாக தந்தாக வேண்டும். ஆதனால் பிடியரிசிப் பள்ளிக் கூடம் என்று அழைக்கப்பட்டது. இப்படி காமராஜர் படித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு வயது ஆறு. இந்த பிஞ்சு வயதில் தன் தந்தை குமாரசாமியை இழந்தார். பாட்டி பார்வதியம்மாளும், தாய், சிவகாமியம்மையும், தன் தங்கை நாகம்மாளும் கண்ணீர் விட்டு கதறியழுதனர். ஆறே வயதான காமராஜர் தந்தைக்கு கொள்ளி சட்டி தூக்கிச் சென்று ஈமச்சடங்குகளை நிறைவேற்றினார். இந்த சோகம் மறைவதற்கு முன்னாள் சிவகாமியம்மாவின் தந்தை சுலோச்சன நாடாரும் இறந்து போனார்.
சிவகாமி அம்மையார் மனம் தளறவில்லை. தன் உடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேர் இருந்தாலும், அவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் தன் இரு பிள்ளைகளையும் தானே வளர்க்க வேண்டும் என்று கருதி தான் அணிந்திருந்த அனைத்து நகைகளையும், தன் காதுகளில் அணிந்த பம்படங்களைத் தவிர, அனைத்தையும் விற்று, தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரிடம் அந்த பணத்தை, மாதம் ரூ.30 என வட்டியைப் பெற்றுக் கொண்டு காமராஜரையும், நாகம்மையையும் வளர்த்தார்.
ஒருநாள் காமராஜர் படித்துக் கொண்டிருந்த ஷத்திரிய வித்யாசாலாப் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்களிடம் தலா ஒன்னே கால் அணா வசூல் செய்து பொரி கடலை சுண்டல் என மாணவர்களுக்கு வரிசையாக வழங்கிக் கொண்டிருந்தனர். காமராஜர் கடைசியாக நின்று கொண்டிருந்தார். கடைசியாக நின்றிருந்த காரணத்தினால் காமராஜருக்கு சிறிதளவு பொரி மட்டுமே, எஞ்சியிருந்ததைத் தான் கொடுத்தனர். அதனை அவர் வீட்டுக் எடுத்துச் சென்றார். பாட்டி பார்வதியம்மாள், இதனைப் பார்த்து விட்டு “ஏன் ராசா பொரி மட்டும் தான் கொடுதாங்களா? சுண்டல் கடலை தரலயா” என்று கேட்டார். “நான் கடைசியா நின்ற காரணத்தால் எஞ்சியிருந்ததைத் தான், எனக்குக் கொடுத்தார்கள் எல்லோருக்கும் சமமா தானே, பகிர்ந்து கொடுக்கனும், முண்டியடித்து கொண்டு முன்னாள் போனாதான் கிடைக்குமா? காசு சரியா கொடுத்த எனக்கு, ஏன் இப்படி குறைவா கொடுக்கனும்? நீங்க நாளைக்கு வந்து கேளுங்க பாட்டி” என்றார்.
இந்த பிஞ்சு வயதிலே அவருக்கு ஏற்பட்ட இந்த தாக்கம் தான், தான் முதலமைச்சராக வந்ததற்குப் பின்னால், மூதறிஞர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை அடியோடு ஒழித்துவிட்டு, அனைத்து தரப்பட்ட மாணவர்களும் சரிசமமாக கல்வியை கற்கும் வகையில், கல்வித்திட்டத்தில் மாபெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்.
அதுமாத்திரமல்ல, விருதுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா இன்றைக்கும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் பவுர்ணமி நன்னாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கையில் தீச்சட்டியுடன் வீதி வலம் வந்து, கோவில் கொண்டு போய் சேர்ப்பார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைத்துள்ள தலித்துக்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று, தீச்சட்டியை சேர்க்கமுடியாது. கோவிலின் பின்பறம் உள்ள அக்கினிக் கிடங்கில் தான், கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற ஊர்கட்டுப்பாடு காலம் காலமாக இருந்து வந்தது.
ஒருமுறை இந்த திருவிழாவின் போது, காமராஜரின் உற்ற நண்பன் தலித் இனத்தைச் சார்ந்த குமரன், தீச்சட்டி ஏந்தி வந்தான். அவனை கோவில் பூசாரி உள்ளே அனுமதிக்காமல், நுழைவு வாயிலில், தன் இரு கைகளாலும் தடுத்தப்படி நின்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட காமராஜர், குமரனின் கையை பிடித்துக் கொண்டு, இளைஞனுக்கே உள்ள பலத்தோடு பூசாரியின் தடைமீறி, முன்னேறிக் கொண்டிருந்தார். பூசாரி உள்ளே விட மறுத்தார். காமராஜருக்கும், பூசாரிக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு பெருத்த கும்பல் கூடியது. பூசாரி, காமராஜரைப் பார்த்து “நாட்டாண்மைக்கார வீட்டுப்பிள்ளை நீயே… இப்படி செய்தால் எப்படிப்பா” ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்று இருக்குல்ல, அரிஜன பசங்க உள்ளே வரக்கூடாதுப்பா, சாமி குத்தமாயிடும்” என்று பூசாரி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், காமராஜர் விடவில்லை. குமரனின் கையை பிடித்துக் கொண்டு பூசாரியின் கையை தட்டிவிட்டு முன்னேற முயன்றார்.
அதற்குள் காந்திய வாதியான பெட்டிக்கடை ஞானம்பிள்ளை அங்கு வந்து சேர்ந்தார். “ராசா ஏம்பா இப்படி பன்ற, ஊர் பெரியவங்க சொல்றாங்கல்ல, ஊர் கட்டுப்பாட்டை மீறலாமா? என்றார். உடனே காமராஜர் “ஐயா, காந்திஜி, தீண்டாமை கொடுமையை அடியோடு ஒழிக்க ஆசைப்படுறார் என்று நீங்க தானே சொன்னீங்க, அப்படி சொன்ன நீங்களே…. இப்படி சொன்னா எப்படி? இவன் ஏன் கோவிலுக்குள் வரக்கூடாதென்று சொல்லுங்க? இவன் கறந்து தர பாலைத்தானே நீங்க எல்லாம் குடிக்கிறீங்க. இந்த கோவில்ல சாமிக்கு அபிஷேகம் பன்றது, இவன் கறந்து கொடுக்கிற பால் தானே. பால் மட்டும் வேணும், இவன் வேணாமா? என்று கூறியபடி குமரனை இழுத்துச் சென்று, பூசாரியின் முட்டுக்கட்டையையும் மீறி கோவிலினுள் உள்ளே சென்று, பூசாரியின் கையாலேயே திருநீறையும் போடவைத்த மாபெரும் சமூகப்புரட்சியாளர் பெருந்தலைவர் காமராஜர். இந்த நிகழ்வு தான் அவர் மனதில் ஆழப் புதைந்து, தான் முதலமைச்சராக வந்ததற்கு பின்னால் பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவரை அனைவரும் மதித்திடும் வகையில் அறநிலையத்துறை அமைச்சராக பதவியில் அமர்த்தி அழகுபார்த்தார்.
1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார். படித்தவர்கள், மற்றும் உயர்தட்டு மக்கள் தான், நாட்டை ஆளமுடியும் என்கின்ற மாயையை முதன்முதலில் உடைத்து தூள் தூள் ஆக்கியவர், படிக்காத மேதை காமராஜர் தான். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தோன்றி, மிடுக்கான கம்பீரத்தோற்றத்தோடு கடைசி வரை எளிமையாக வாழந்து காட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
பெருந்தலைவர் காமராஜர் இந்த மண்ணில் அவதரித்து இருக்காவிட்டால், தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாகவும், பிற்படுத்தப்பட்டவன் பிற்படுத்தப் பட்டவனாகவும், ஒடுக்கப்பட்டவன் ஒடுக்கப்பட்டவனாகவே வாழ்ந்திருப்பான். இந்த மண்ணில் எந்த மாற்றங்களும் நிகழ்ந்திருந்திருக்காது.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக வந்ததற்கு பின்னால், குருகுலப் பள்ளிகளுக்கு மூடுவிழா கண்டு, வெறும் 550 உயர்நிலை பள்ளிகளையும் 15,303 ஆரம்ப பள்ளி கொண்ட தமிழகத்தில், 1361 உயர்நிலைப்பள்ளிகளையும், 26,700 ஆரம்பப்பள்ளிகளையும் துவக்கி மாபெரும் கல்விப்புரட்சி செய்தார். அதுமாத்திரம்மல்ல 28 கல்லூரிகளை கொண்ட தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளையும், 17 பயிற்சி கல்லூரிகளையும் 3 உற்பயிற்சி கல்லூரிகளையும், கண்டவர் கர்மவீரர் காமராஜர்.
இன்றைக்கு ஒவ்வொரு மூலையிலும் டாக்டராக, இஞ்ஜினியராக, வக்கீலாக படித்துப் பட்டம் பெற்ற நம் சுப்பனும், குப்பனும், காமராசரை நினைத்துப் பார்க்க வேண்டும். படைக்கும் கடவுள் என்று பிரம்மாவையும், காக்கும் கடவுள் என்று மகாவிஷ்ணுவையும், அழிக்கும் கடவுள் என்று சிவனையும், காலம் காலமாக பூஜித்து வருகிற நாம் நான்காவது கடவுளாக ஆறாவது அறிவு அளித்த அண்ணல் என்ற சிறப்பிடத்தை பெருந்தலைவருக்கு ஒதுக்க வேண்டும்.
அவர் இல்லையென்றால் இந்தோனேசியக் காடுகளில் இன்றும், வசிக்கும் காட்டுவாசிகளாகத் தானே வாழ்ந்திருப்போம். இன்றைக்கு, கல்லூரிகளில் தன் மகனுக்கு இடம் கிடைப்பதற்காக கால்கடுக்க நிற்க மாட்டோமே. தன் குழந்தையை எல்.கே.ஜியில் சேர்க்க 8 கி.மீ. தூரம் நிற்க மாட்டோமே. இந்த அறிவுப் புரட்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். இன்றைக்கு கல்வியில் எவ்வளவோ பெரிய மாற்றங்கள் வந்திருந்தாலும் கூட, அந்த மகத்தான மாமனிதர் அமைத்துத்தந்த அடித்தளம் தான் காரணம்.
இதனால் தான், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் பிதாமகனாக விளங்கிய தந்தை பெரியார் அவர்கள், 9.7.1961ல் தேவக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் “தோழர்களே எனக்கு 82 வயது ஆகிறது. நான் ஒரு மரண வாக்குமூலம் கூறுகிறேன். மரணதருவாயில் உள்ளவன் பொய் கூறவேண்டிய அவசியமில்லை. நம் நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். நாயக்கர்களும், மராட்டியர்களும், முகலாயர்களும் வெள்ளையர்களும் ஆண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நம் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை. இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம் பாராட்டத்தக்கது. அனைவருக்கும் கல்வியை கொண்டு போய் சேர்த்தவர் பச்சை தமிழர் காமராஜர். எனவே என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்படவேண்டும் என்றால், காமராஜரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள் காமராஜரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆள் கிடையாது” என்று பகிரங்கமாகவே தன் ஆழ்மனதில் உள்ளவற்றை, அடிவயிற்றிலிருந்து சொல்லி பாராட்டுப் பத்திரம் அளித்தார்.
அதுமாத்திரமல்ல, முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சேரமா தேவி வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். வழியில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்தது. கார் நிற்கிறது. அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அருகே அழைக்கிறார்.
“தம்பி இங்க வா..! பள்ளிக்கூடத்துக்கு போகலையா”? என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுவன் “பள்ளி கூடத்துக்கு போன, சோறு நீயா போடுவ” என்றான்.
காமராஜருடன் வந்த அதிகாரிகள் அந்த சிறுவனை அடிக்க ஓடுகிறார்கள்.
“யேய் நில்லுங்கப்பா… இந்த நாட்டோட முதலமைச்சரையே.. தெரியாத அறியாமையில் இருக்கிறான். அவன் படித்திருந்தால் இப்படி பேசுவானா? என்று அதிகாரிகளை அமைதிப்படுத்தினார்.
அந்த சிறுவனை மீண்டும் அழைத்து, “தம்பி சோறு போட்டா பள்ளிக்கூடத்திற்கு போவியா..! என்றார்.
அந்த சிறுவன் அவரை ஏளனமாக, ஏற இரங்க பார்த்துவிட்டு, அப்பாகிட்டே கேட்டு சொல்றேன் என்று சொல்லிவிட்டு திரும்பவும் மாடுமேய்பதிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.
இந்த நிகழ்வு பெருந்தலைவரை வெகுவாக பாதித்தது. தான் சென்னை திரும்பியவுடன் முதல்வேலையாக கல்வித்துறை இயக்குனர் சுந்தரவடிவேலை அழைத்து, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமுல் படுத்த எவ்வளவு செலவாகும் என்று கேட்டறிந்து, ஒரு கோடி செலவாகும் என தெரிந்துகொண்டு உடனடியாக மதிய உணவு திட்டத்ததை அமுல் படுத்தச் சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர். அதுவும் அந்தத் திட்டத்தை முதன்முதலில் எங்கு தெரியுமா தொடக்கி வைத்ததார்? “தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற மகாகவி சுப்ரமண்ய பாரதியார் பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் தான் துவக்கி வைத்தார்.
இதன் மூலம் பள்ளி செல்லும் மாணவர்களின் வரத்து அதிகமானது. பள்ளிக்கூடங்கள் பெருகின. இப்படி “சோறு போட்டு கூறு(அறிவு) வளர்த்தவர்” கரியமாணிக்கம் காமராஜர். அது மாத்திரமல்ல ஜாதிமத பேதங்களை கலைந்திட சீருடைத் திட்டத்தையும் அமுல் படுத்தி உலக அரங்கில் தமிழிகத்தில் மறுமலர்ச்சி செய்தவரும் அவரே.
சமூத்திற்காக தன் உறவுகளை துறந்தவர். தன் உறவுகளால் தனக்கோ, தன் அரசுக்கோ, கெட்ட பெயர் நேர்ந்துவிடுமோ என்று பயந்து பயந்து வாழ்ந்தவர். தன் தாய்க்கு மாதா மாதம் அனுப்பும் தொகையான ரூ.120ஐ, வீட்டுக்கு வருபவர்களுக்கு சோடா கலர் வாங்கி தர ரூ.150 ஆக உயர்த்திக் கேட்டபோது, முடியாது என்று மறுத்து எளிமையை கடைபிடிக்கச் சொன்னவர் காமராஜர். வீட்டிலே கழிவறை கட்டுவதற்கு தன் தாயார் பக்கத்தில் ஒரு இடம் வாங்க ரூ.3000 கேட்டபோது, “நீ கக்கூஸ் கட்ட இடம் வாங்கினேன்னு சொல்லமாட்டான், காமராஜர் பங்களா வாங்கிட்டேம்பான். ஆதனால அத விடுண்ணே.” என்று கண்டிப்போடு வாழ்ந்தவர் காமராஜர். இந்த எளிமையின் எழிலை இனி எப்படி காண்பது.
அது மாத்திரமல்ல, இன்றைக்கும் பாசனவசதிகள், பெருகிக்கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் அணைகள் எல்லாம் அந்த மகத்தான மாமனிதரின் பெயர் தான் உச்சரிக்கும். கீழ்பவானி அணைக்கட்டு, மணிமுத்தாறு அணைக்கட்டு, காவேரி டெல்லா அணைக்கட்டு, ஆரணி ஆறு அணைக்கட்டு, வைகை அணைக்கட்டு, சாத்தனூர் அணைக்கட்டு, கிருஷ்ணகிரி அணைக்கட்டு, வீடூர் அணைக்கட்டு, பரம்பிக்குளம் அணைக்கட்டு, நெய்யாறு அணைக்கட்டு போன்ற நீர்த் தேங்கங்களை கட்டியதோடு மாத்திரமல்லாமல் அதன் மூலம் நீர் மின் திட்டங்களையும், செயல்படுத்தி வறண்டு கிடந்த தமிழகத்திற்கு நீரைபாய்ச்சி, இருண்டு கிடந்த தமிழகத்திற்கு ஒளியைப்பாச்சி ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சாதனையைப் படைத்தளித்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அதுமாத்திரமல்லாமல், திருச்சியில் 'BHEL' என்று அழைக்கப்படும் ராட்சத கொதிகலன் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணம் செய்ய செக்கோஸ்லோவாக்கியா அரசு முன்வந்தது. அதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார், பெருந்தலைவர் காமராஜர்.
மத்திய அரசு அதிகாரிகளும், அந்த வெளிநாட்டு நிறுவனத்தினரும் இணைந்து அந்தத் தொழிற்சாலையை தமிழகத்தில் எந்த இடத்தில் அமைக்கலாம் என்று அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
காமராசர் தில்லியில் இருந்து கொண்டு, தொழில் துறை அமைச்சர் ஆர். வெங்கட்ராமனை அந்த குழுவினருடன் அனுப்பி அவர்களுக்கு தேவையான இடத்தை காட்ட சொன்னார். பரந்த சமவெளியான இடம், சுத்தமான தண்ணீர், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து, விமான நிலையம், ரெயில் நிலையம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளைக் கொண்ட இடம்தான் அந்தத் தொழிற்சாலைக்குத் தேவை என்று வெளிநாட்டு நிறுவனத்தினர் கூறினர்.
அத்தனை வசதிகளையும் கொண்ட ஓர் இடத்தை அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் தமிழக அதிகாரிகளால் அவர்களுக்குச் சுட்டிக் காட்ட இயலவில்லை.
தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்துவிட்டு, சோர்ந்து போன வெளிநாட்டு நிறுவனத்தினர் தொழிற்சாலை அமைக்க தமிழகத்தில் தகுந்த இடமில்லை என்ற முடிவோடு கிளம்பத் தயாரானார்கள்.
விஷயத்தை ஆர். வெங்கட்ராமன் காமராஜரிடம் கூற, உடனே அவர், அவர்களை இருக்க சொல். என்று சொல்லி விட்டு தில்லியிலிருந்து கிளம்பி தமிழகம் வந்து சேர்ந்தார். ஆர். வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகளையும், வெளிநாட்டு
நிறுவனத்தினரையும் அழைத்து, "எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்று பார்த்தீர்கள்?" என்று விசாரித்தார்.
தமிழக அதிகாரிகள் தாங்கள் அழைத்துச் சென்று காட்டிய இடங்களை பட்டியலிட்டதுடன், வெளிநாட்டு நிறுவனத்தார் எதிர்பார்க்கும் வசதிகள் ஒருசேர இடத்தைக்காட்ட இயலவில்லை என்றனர்.
தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் தனது காலடி பதிய பயணம்
செய்தவராயிற்றே, காமராஜர், ஒரு கணம் சிந்தித்துவிட்டு "திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தை காட்டினீர்களா?" என்று ஆர். வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகளைக் கேட்க, இல்லையென்று தலையாட்டினார்கள்.
"ஏன்?... இவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே... போய் முதல்ல அந்த இடத்தை காட்டிவிட்டு எங்கிட்ட வாங்க!" என்றார், அந்தப் படிக்காதமேதை.
என்ன ஆச்சரியம்! அங்கே போய் பார்வையிட்ட வெளிநாட்டு
நிறுவனத்தாருக்கு, அந்த இடம் பிடித்துப் போய்விட்டது. அது எல்லா வகைகளிலும் தொழிற்சாலை அமைக்கப்
பொருத்தமானதாக இருந்தது. அந்த இடமே இறுதியாகத் தேர்வானது. ஏறக்குறைய 750 ஏக்கர் பட்டா நிலத்தையும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் மாநில அரசு அதற்காக ஒதுக்கிக் கொடுத்தது. அங்கே புதிய தொழிற்சாலை உருவானது.
ஆரம்பத்தில் *HEL* என்ற பெயரில் தொடங்கப்பட்டு, இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் *BHEL* என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது.
1-5-1963-ம் ஆண்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது. அதை அப்போதைய துணை ஜனாதிபதி ஜாகிர் உஷேன் திருச்சி பெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.
பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர் தொழில் வளர்ச்சி.
தொழில் வளர தடையற்ற மின்சாரம் வேண்டும். இதில் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் வழியாகவே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அனல்மின் நிலையங்களை அமைக்க உதவுவதுதான் 'பெல்' நிறுவனத்தின் முதன்மைப் பணி. 'பெல்' நிறுவனத்தின் பங்களிப்பை எளிய மனிதனின்
வார்த்தையில் சொன்னால்,
நம் வீட்டில் 4 விளக்குகள் எரிந்தால் அதில் 3 விளக்குகள் 'பெல்' நிறுவனத்தின் துணையோடுதான் எரிகின்றன என்பதே. அப்படி இந்த தேச முன்னேற்றத்திற்கும் குறிப்பாக தாழ்த்து கிடந்த நம் தமிழகத்தில் தொழில் புரட்சியை செய்தவர் படிக்காத மேதை பெருந்தலைவர் காமராசர்.
அதுமாத்திரமல்ல இன்னும் பல தொழிற்சாலைகள் படைத்தார். நூற்பாலைகள், லட்சம் நூற்பு கதர்கள், 8000 துணி நூற்பாலைகள், கிண்டியில் மாபெரும் தொழிற்பேட்டை, சிமெண்ட் ஆலைகள்,உலைக்கூட உருளைச் செங்கல் ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள், காகித உற்பத்தி ஆலைகள், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், கார்களின் உதிரிபாக உற்பத்தி அகங்கள், சைக்கிள் தொழிற்சாலை மற்றும் தானியங்கி ஈருளிகள், பாதை கனமாக்கும் எஞ்ஜின்கள், தட்டச்சுப் பொறிகள், களைக்கும் பொறிகள், காஸ்டிக் சோடா – கந்தக அமில தொழிற்கூடம், நெய்வேலி உரத்தொழிற்கூடம், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், டிரான்ஸ்பார்மர்கள், ஸ்விட்ச் கியர்கள், எலட்ரிக் கேபிள்கள், மீட்டர் கருவிகள், மின்தடைக் கருவிகள், வானொலிப்பெட்டிகள், சுழல்மின் விசிறிகள், அலுமினிய உற்பத்தி உலைகள், ஒளிப்பட சுருள் தொழிற்சாலை, மருத்துவ அறுவைசிகிச்சை கருவிகள், டெலி பிரிண்டர்கள், ஐ.சி.எப். தொடர் வண்டி பெட்டி தொழிற்சாலை, விரைவுந்து வாகனங்கள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, மாக்னசைட் தொழிற்சாலை, சுண்ணாம்புக்கல் சுரங்கம், ஹிந்துஸ்தான் போட்டோ பிரிண்ட் இவை அனைத்தும் முறையாக டெண்டர்விடப்பட்டு யாரிடமும் ஒரு பைசாகூட கமிஷன் பெற்றுக் கொள்ளாமல் (இன்றைய அரசியல்வாதிகள் போலல்லாமல்) துவங்கப்பட்ட தொழிற்சாலைகள்.
ஆதனால் தான் இன்றளவும் பழுதில்லாமல், நட்டம் அடையாமல் பலருக்கும் வேலைவாய்ப்பளித்து காமராஜர் பெயர் சொல்லி நின்று நிலைத்திருக்கிறது.
ஒரு படிக்காத பாமரனின் சாதனையை பார்த்தீர்களா? உலக நாடுகள் வியப்பில் ஆழ்ந்தன. எதையும் ஆழ்ந்து சிந்தித்து தீர்க்கமான முடிவினை எடுத்த தீர்க்கதரிசிதான், பெருந்தலைவர் காமராஜர். அவர் நினைத்திருந்தால், அவரால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிடமிருந்து 25 சதவீதம் கமிஷன், அதாவது இன்றைய மதிப்பில் ரூ.10 லட்சம் கோடிக்கு அதிபதியாகி, சுபிட்ச வாழ்வை அவருடைய குடும்பம் அடைந்திருக்கலாம். ஆனால் கரைபடியாத கரத்திற்கு சொந்தக்காரரான அந்த மனிதரின் குடும்பம், இன்றைக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளக்கூடிய அவல நிலைக்கு ஆட்பட்டுள்ளது.
அவரிடம் போலீஸ் இலாகா அமைச்சராக இருந்த கக்கன் வசதியில்லாமல் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 1980 இல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மதுரையில் நடைபெற்ற மேதின விழாவில் பங்கேற்று விட்டு, மதுரை பொது மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மதுரை முத்துவை பார்த்துவிட்டு வெளியே வரும் போது, முன்னாள் அமைச்சர் கக்கன் இங்கு தான் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று காளிமுத்து சொன்னதற்கு பின்னால், கக்கனை எம்.ஜி.ஆர் சந்தித்து பேசினார். எந்த உதவி வேண்டுமானாலும் தயங்கால் என்னிடம் கேளுங்கள் என்று கூறியும், உங்கள் அன்பு ஒன்றே போதும் என்று கூறி இறுதியில் மேல் சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் மாண்டுபோனார். இதிலிருந்தே காமராஜரின் நேர்மை நமக்கெல்லாம் நன்கு புலப்படும்.
அதர்மம் தலை தூக்கும்போது தர்மத்தை நிலைநாட்ட கடவுள் அவதரிப்பான் என்ற பகவத்கீதையின் படி, காமராஜர் என்ற கடவுள் அவதரித்து நம்மை சூழ்ந்திருந்த பல தீமைகளை பொசுக்கி, பல நலன்களுக்கு ஆணிவேராக, அஸ்திவாரமாக இருந்து, 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் மாலை 3.20 க்கு, தான் வந்த நோக்கத்தை முடித்துக் கொண்டு, அவர்தம் பூத உடலை இந்த மண்ணிலே எரித்துவிட்டு, மீண்டும் அதர்மம் தலைதூக்கும்போது, வேறொரு இளைஞனின் உடலில் புகுந்து மீண்டும் தமிழகத்திற்கு கடமையாற்றுவேன் என்று கூறி சென்றிருக்கிறார். வாழ்க காமராஜர் புகழ்....!வளர்க அவரது தொண்டு......!
கே.பி.ரோகித்
கணேஷ்
(சொற்பொழிவாளர், கட்டுரையாளார்)
145, மின்னப்பன் தெரு,
உறையூர், திருச்சி -3