Date : 26 June 2026, 9:45 pm
Posted By : ADMIN

முதல் டி20: ஆதிக்கத்தைத் தொடருமா இந்தியா? அயர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

முதல் டி20: ஆதிக்கத்தைத் தொடருமா இந்தியா? அயர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

ஹைதராபாத்: அயர்லாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி, நாளை பெல்பாஸ்ட்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களம் காண்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, இந்திய அணி பங்கேற்கும் முதல் சர்வதேச டி20 தொடர் இது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி, பெல்பாஸ்ட்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராகத் தோல்வியே கண்டிராத இந்திய அணி, இப்போட்டியிலும் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தங்களுக்குச் சாதகமான சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இந்திய அணிக்குக் கடுமையான சவால் அளிக்க அயர்லாந்து அணியும் தீவிரமாகத் தயாராகி வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி தங்களின் முதல் டி20 சவாலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி, சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு பெற்று தங்களது சர்வதேச அறிமுகத்திற்காகக் காத்திருக்கின்றனர். மறுபக்கம், உலகக் கோப்பை நாயகர்களான சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே ஆகியோர் பேட்டிங்கிலும், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சிலும் அணிக்கு பெரும் பலமாக உள்ளனர். மறுபக்கம், அயர்லாந்து அணியும் லோர்கன் டக்கர் தலைமையில் இந்தத் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. முன்னணி வீரர்கள் காயத்தால் விலகியிருந்தாலும், அணியின் பேட்டிங்கில் அதிரடி வீரர் ராஸ் அதிர், ஹாரி டெக்டர், டிம் டெக்டர் ஆகியோரும், பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்ட் வரிசையில் அனுபவமிக்க ஜார்ஜ் டக்ரேல், மேத்யூ ஹம்ப்ரிஸ் மற்றும் லியாம் மெக்கர்த்தி ஆகியோரும் இருப்பது அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. சொந்த மண்ணில் முற்றிலும் புதிய இளம் வீரர்களுடன் களம் காணும் அயர்லாந்து அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த எட்டிலும் இந்திய அணியே முழுமையாக வெற்றி பெற்று, தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான இந்த டி20 தொடரை, இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளிலும், ஆன்லைனில் தளங்களில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலையாகக் காண முடியும். இந்திய நேரப்படி போட்டிகள் அனைத்தும் மாலை 6 மணிக்குத் தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ். அயர்லாந்து: டிம் டெக்டர், ராஸ் அதிர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் (கேப்டன்), ஜார்ஜ் டாக்ரெல், கேரத் டெலானி, பெஞ்சமின் கேலிட்ஸ், லியாம் மெக்கார்த்தி, ரூபன் வில்சன், மேத்யூ ஹாலார்ட், ஜெய் மூந்த்ரா.