Date : 26 June 2026, 9:42 pm
Posted By : ADMIN

சுத்தமான நீரிலும் பரவும் டெங்கு: காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டியவை என்ன?

சுத்தமான நீரிலும் பரவும் டெங்கு: காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டியவை என்ன?

மழைக்காலம் தொடங்கும் போது அதனோடு சேர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் மிக தீவிரமாக அதிகரிக்க தொடங்குகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழை காலத்திலும், அதற்கு பிந்தைய மாதங்களிலும் டெங்குவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், டெங்கு பாதிப்பில் பெரும் பகுதியை இந்தியா சுமந்து கொண்டிருக்கிறது. இந்த நோய்க்கு என இன்னும் தனியாக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் (Antiviral treatment) எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், நோய் வராமல் முன்னெச்சரிக்கையாக தடுப்பதும், காய்ச்சல் வந்தவுடன் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை எடுத்து கொள்வதும் மட்டுமே நம்மிடம் இருக்கும் ஒரே வழியாகும். எனவே, இந்த டெங்கு பரவல் காலத்தில் பாதுகாப்பாக இருக்க முக்கியமான சில அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மழை குறைவாக இருந்தால் கொசுக்களின் தொல்லை குறைவாக இருக்கும் என்று பலரும் தவறாக நினைத்து கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. கனமழை பெய்யும் போது கொசுக்களின் முட்டைகளும், புழுக்களும் நீரில் அடித்து செல்லப்பட்டுவிடும். மாறாக, மிதமான மழை பெய்துவிட்டு, அதன்பின் நிலவும் வெப்பமும் ஈரப்பதமும் கலந்த வானிலை ஏடிஸ் (Aedes) கொசுக்கள் பெருகுவதற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கி விடுகின்றன. இதனால், மழை குறைவாக இருக்கும் நாட்களிலும் நாம் ஏமாந்துவிடாமல், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். சுத்தமான வீடுகளிலும் ஒளிந்திருக்கும் ஆபத்து சாக்கடைகளிலும், அசுத்தமான இடங்களிலும் மட்டுமே கொசுக்கள் வளரும் என்றொரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முற்றிலும் சுத்தமான, தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. நம் வீடுகளில் நாம் அடிக்கடி கவனிக்க தவறும் பூந்தொட்டி, குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தேங்கும் நீர், ஏசி அவுட்லெட் குழாய்கள், பறவைகளுக்கு வைக்கும் தண்ணீர் பாத்திரங்கள், மொட்டை மாடி மற்றும் பால்கனி ஓரங்களில் தேங்கும் சிறிய அளவிலான சுத்தமான தண்ணீரே இக்கொசுக்களின் முதன்மை வாழ்விடங்களாக மாறுகின்றன. எனவே, வீடு சுத்தமாக இருக்கிறது என்பதால் மட்டும் டெங்கு வராது என்று அலட்சியமாக இருக்க முடியாது. மருத்துவமனை அனுமதியை தவிர்க்கும் முன்னெச்சரிக்கைகள் குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் போது, அது அவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமல்லாமல், குறைந்தது ஒரு வாரமாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம். இதனை தவிர்க்க, குழந்தைகளுக்கு முழுக்கை சட்டைகள் மற்றும் நீளமான பேன்ட்களை அணிய செய்வது, கொசு விரட்டி கிரீம்களை பயன்படுத்துவது, ஜன்னல்களில் கொசு வலைகளை பொருத்துவது போன்ற எளிய பழக்கவழக்கங்களை நாம் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும். சாதாரண காய்ச்சல் என்று அலட்சியப்படுத்தக் கூடாது மழைக்காலத்தில் காய்ச்சல் வந்தவுடன், அது சாதாரண பருவக்கால காய்ச்சலாக தான் இருக்கும் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். ஆரம்பக் கட்டத்தில் டெங்குவின் அறிகுறிகளும், சாதாரண வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதிக காய்ச்சல், கடுமையான உடல் வலி, தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, தோலில் சிவந்து தடிப்புகள் ஏற்படுதல் மற்றும் அதிகப்படியான சோர்வு ஆகியவை டெங்குவின் முக்கிய அறிகுறிகளாகும். எனவே, காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது மட்டுமே ஆபத்துகளைத் தவிர்க்கும் வழியாகும். கை வைத்தியங்கள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது டெங்கு காய்ச்சல் வந்தவுடன் பப்பாளி இலைச் சாறு, ஆட்டுப்பால், மூலிகைக் கலவைகள் போன்ற வீட்டு வைத்தியங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்துப் பலரும் பின்பற்றத் தொடங்குகின்றனர். ஆனால், இவற்றுக்கு தெளிவான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இன்னும் இல்லை. இந்த வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பி முறையான மருத்துவ சிகிச்சையை தாமதப்படுத்துவது, நோயின் தீவிரத்தை அதிகமாக்கி நிலைமையை மோசமாக்கிவிடும். டெங்குவிலிருந்து மீள உடலுக்கு தேவையான ஓய்வு, மருத்துவரின் கண்காணிப்பு மற்றும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே மிக முக்கியத் தேவைகளாகும். காய்ச்சல் குறைந்த பிறகுதான் அதிகக் கவனம் தேவை டெங்குவின் மிக விசித்திரமான மற்றும் ஆபத்தான அம்சம் என்னவென்றால், காய்ச்சல் குணமாகி உடல் சூடு குறையும் போதுதான் அதன் தீவிர கட்டம் (Critical phase) தொடங்குகிறது. காய்ச்சல் குறைந்த 3 முதல் 5 நாட்களில் குழந்தைகள் மிகவும் சோர்வடைவது, தொடர்ந்து வாந்தி எடுப்பது, கடுமையான வயிற்று வலி, மூக்கு அல்லது ஈறுகளில் ரத்தப்போக்கு, தோலில் ரத்தப் புள்ளிகள் தோன்றுவது, கைகால்கள் குளிர்ந்து போவது மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தையின் உடல் எடையை தீர்மானிப்பது பெற்றோரின் மரபணுக்களா? சர்வதேச ஆய்வில் தகவல்! சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இந்தியாவின் தற்போதைய நிலையும், எதிர்கால சவால்களும்!