Date : 26 June 2026, 9:41 pm
Posted By : ADMIN

நீட் மறுதேர்வு எழுதியவர்கள் கட்டணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம் - விடைக்குறிப்பு வெளியான நிலையில் என்.டி.ஏ அறிவிப்பு

நீட் மறுதேர்வு எழுதியவர்கள் கட்டணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம் - விடைக்குறிப்பு வெளியான நிலையில் என்.டி.ஏ அறிவிப்பு

புது டெல்லி: நீட் மறுதேர்வின் உத்தேச விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனை ஜூன் 28-ம் தேதி வரை பெறப்படும் நிலையில், தேர்வு கட்டணத்தைத் திரும்ப பெற மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என என்.டி.ஏ (NTA) அறிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான இளநிலை நீட் தேர்வு இந்தாண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் வினாத்தாள் கசிவு காரணமாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், நீட் மறுதேர்விற்கான உத்தேச விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் உத்தேச விடைக்குறிப்பை https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக ஜூன் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ஒரு கேள்விக்கு ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். இரவு 11.50 மணிக்கு மேல் பெறப்படும் ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. விடைக்குறிப்பு பதிவிறக்கம் செய்வது எப்படி? படி 1: https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். படி 2: முகப்பு பக்கத்தில் Provisional Answer Keys என இடம்பெற்று இருக்கும். படி 3 : அதனை கிளிக் செய்தால் 4 வித வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்பு அடங்கிய PDF இடம்பெற்று இருக்கும். படி 4: அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். படி 5: அதனை வினாத்தாளுடன் ஒப்பிட்டு, சரியான விடையை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அளித்த ஆட்சேபனைகள் வல்லுநர்கள் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, இறுதி விடை உறுதி செய்யப்படும். அதன்படி, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. நீட் மறுதேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்த முறை விடைக்குறிப்பு வெளியிடப்பட்ட அதே தருணத்தில் மாணவர்களின் ஓஎம்ஆர் தாள்கள் ஸ்கேன் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மதிப்பீடு பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று, விரைவில் முடிவுகள் வெளியிடவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. உத்தேச விடைக்குறிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு மாணவர்கள் 011-40759000 / 011-69227700 ஆகிய எண்கள் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் திரும்பி பெற விண்ணப்பிக்கலாம் நீட் மறுதேர்வை எழுதியவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை திரும்பி பெற விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தின் வழியாக மாணவர்கள் அவர்களின் வங்கி விவரங்களை அளித்து கட்டணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம். படி 1 : இணையதளத்தின் வழியாக லாங்கின் செய்யவும். படி 2 : அதில் உள்ள வங்கி விவரங்களை சரிபார்க்கவும். படி 3 : திருத்தம் தேவைப்பட்டால், உங்களுடைய வங்கி எண், IFSC மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவை அளிக்கவும். படி 4: நீங்கள் அளித்த மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பி வங்கி விவரம் சரிபார்க்கப்படும். இதற்கு முன்பு கட்டணம் திரும்பி பெற விருப்பம் தெரிவிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்க ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு முறைக்கு இரு முறை வங்கி விவரங்களை சரிபார்த்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.