சென்னை: வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு உரிமை கோரி பெற்றோர் தாக்கல் செய்யும் மனு மீது நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ள உள்ள குழந்தைக்கு, பெற்றோர் என உரிமை கோரி, நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதியர் நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில், உரிமை கோரி விண்ணப்பித்த பெண்ணின் வயது 50ஐ கடந்ததாகவும், வாடகைத்தாயாக செயல்பட உள்ள பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி ஷமீம் அஹமது முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருந்தார். அவர், "வாடகைத்தாய் ஒழுங்குமுறைச் சட்டம் என்பது குழந்தை பெற விரும்பும் தம்பதியர், வாடகைத் தாய்மார்கள் மற்றும் பிறக்கவுள்ள குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க இயற்றப்பட்ட நலம் சார்ந்த சட்டம் என சுட்டிக்காட்டி, தேவையற்ற சிறு குறைபாடுகளால் குழந்தை பெறும் உரிமையை மறுக்கக் கூடாது என வாதித்தார். மேலும், குழந்தைக்கு உரிமை கோரி விண்ணப்பித்த பெண் 50 வயதைப் பூர்த்தி செய்திருந்தாலும், 51 வயதை அடையும் வரை சட்டப்படி தகுதியுடையவராகவே கருதப்பட வேண்டும். அவரின் மனு மீது மாஜிஸ்திரேட்கள், தகுதிச் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்யும் மேல்முறையீட்டு அதிகாரியைப் போல செயல்பட முடியாது" என்று வாதிட்டார். அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெற்றோர் உரிமை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ததுடன், மீண்டும் இந்த மனுவை பரிசீலித்து, நான்கு வாரங்களில் முடிவெடுக்க நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அரசு வழக்கறிஞர் ஜான் சத்யன், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆகியவர்களை நீதிபதி பாராட்டினார். மேலும், வாடகைத்தாயாக செயல்பட தயாராக உள்ள பெண், விருப்பப்பட்டு வாடகை தாயாகியுள்ளாரா? என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். குழந்தை பிறந்த பின், அதன் மீது உரிமை கோரப்போவதில்லை என உத்தரவாதம் பெற வேண்டும். வணிக நோக்கம் இல்லை என்பதில் திருப்தியடைய வேண்டும். குழந்தையை கைவிடப் போவதில்லை என குழந்தையை பெற உள்ள தம்பதியரிடம் உத்தரவாதம் பெற வேண்டும். பெற்றோர் உரிமை கோரிய மனுக்களில் நான்கு வாரங்களில் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை வகுத்து நீதிபதி ஷமீம் அஹமது உத்தரவிட்டுள்ளார். இந்த விதிமுறைகளை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த ஏதுவாக, உரிய சுற்றறிக்கைகளை பிறப்பிப்பதற்காக, இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கும்படி, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 9:38 pm
Posted By : ADMIN
வாடகைத் தாய் குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர்; 4 வாரங்களில் முடிவெடுக்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவு