"சத்துணவு சாப்பாட்டுக்காகத்தான் நான் பள்ளிக்கூடத்துக்கே போனேன்" என்று பழைய நினைவுகளை அசைபோடும் மனிதர்கள் நம்மிடையே ஏராளம் இருக்கிறார்கள். வறுமையும் பசியும் சூழ்ந்த கிராமப்புறங்களில், "இன்னைக்கு ஸ்கூல்ல முட்டை போடுவாங்க!" என்று தங்களின் பிஞ்சு முகங்களில் ஆயிரம் வாட்ஸ் புன்னகையோடு காலையில் ஓடிவரும் குழந்தைகளை நாம் தினமும் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகளில் கொடுக்கப்படும் அந்த ஒரு முட்டை, வெறும் உணவு மட்டுமல்ல, பல ஏழைக் குடும்பங்களின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கான அச்சாணி. இப்படி தங்கு தடையின்றி நன்றாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சூழலில்தான், மேற்கு வங்க மாநிலத்தின் மதிய உணவுத் திட்டத்தில் (PM POSHAN) ஒரு அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்கப்படாது என்ற செய்தி வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாறும்போது காட்சிகள் மாறுவது எதார்த்தம்தான் என்றாலும், குழந்தைகளின் தட்டில் இருக்கும் உணவை மாற்றும் இந்த முடிவு ஊட்டச்சத்து ஆர்வலர்களிடமும், பெற்றோர்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, மதிய உணவு சமைக்கும் பணியை ஆன்மீக அமைப்பான இஸ்கானோடு (ISKCON) தொடர்புடைய 'அன்னமித்ரா ஃபவுண்டேஷன்' வசம் ஒப்படைத்துள்ளது. இந்த அமைப்பு தங்களின் ஆன்மீக உணவு முறையைப் பின்பற்றி, மதிய உணவிலிருந்து முட்டையை முழுமையாக நீக்கியுள்ளது. நாம் இங்கு அரசியல் பேசப் போவதில்லை, மாணவர்களின் உணவு சைவமாக மாற்றப்பட்டதன் பின்னணியில் இருக்கும் எதார்த்தமான சாத்தியக்கூறுகளையும், ஊட்டச்சத்து உண்மைகளையும் பற்றி மட்டுமே விரிவாகப் பேசப் போகிறோம். முட்டைக்கு மாற்றாக சோயாவும் பன்னீரும்: சாத்தியமா? முட்டையை நீக்கியதற்கு பதிலாக, குழந்தைகளுக்கு பன்னீர், ராஜ்மா, சோயா சங்ஸ் போன்ற சைவ உணவுகளை வழங்கப் போவதாக இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்டவுடன், "சைவ உணவிலும் தான் புரதச்சத்து (Protein) இருக்கிறதே, பிறகு ஏன் இவ்வளவு சர்ச்சை?" என்று சாதாரணமாக நினைப்பவர்கள் பலர். ஆனால், ஒரு மதிய உணவுத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே ஏழை குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுத்து, அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதுதான். இந்தியாவின் பல மாநிலங்களில் கோடிக்கணக்கான குழந்தைகள் இந்த ஒரு வேளைப் பள்ளிக்கூட உணவை நம்பித்தான் வாழ்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மட்டும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு திட்டத்தில், முட்டைக்கு மாற்றாக பன்னீரும் சோயாவும் வழங்கப்படும் என்று சொல்வதன் எதார்த்த நிலையை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புரியும் மாதிரி எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் இப்போது ஒரு முட்டையை சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் புரதத்தின் அளவு 6 கிராம். மிக எளிதாக, சில நிமிடங்களில் இந்த 6 கிராம் உயர்தர புரதம் உங்கள் உடலுக்குள் சென்று சேர்ந்துவிடும். இதே 6 கிராம் புரதத்தை நீங்கள் சோயா மூலமாகவோ அல்லது பன்னீர் மூலமாகவோ பெற வேண்டும் என்றால், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஊட்டச்சத்து எண்களின்படி பார்த்தால், 50 கிராம் பன்னீர் சாப்பிட்டால் தான் 9 முதல் 10 கிராம் புரதம் கிடைக்கும். அதேபோல் 25 கிராம் உலர் சோயா துண்டுகளையும், ராஜ்மாவையும் சாப்பிட்டால் தான் அதற்கு இணையான புரதம் கிடைக்கும் என்று காகிதத்தில் கணக்கு எழுதலாம். இது குறித்து பெங்களூரு ஸ்பார்ஷ் (SPARSH) மருத்துவமனையின் முதன்மை ஊட்டச்சத்து நிபுணர் வாணி கிருஷ்ணா அவர்களிடம் கேட்டபோது, "இந்தியர்களிடம் சைவ உணவு முறையைப் பற்றி ஒரு மிகப்பெரிய தவறான புரிதல் இருக்கிறது. சைவ உணவுகளில் புரதச்சத்தே இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பருப்பு வகைகள், சுண்டல், பன்னீர், தயிர், பால், சோயா, டோஃபு, நட்ஸ் மற்றும் சிறுதானியங்கள் என இந்திய பாரம்பரிய சைவ உணவுகளில் ஏராளமான புரத ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இங்குப் பிரச்சனை என்னவென்றால், உணவின் 'அளவு, தரம் மற்றும் அதன் சமநிலை' தான் (Quantity, Quality and Balance). பலரும் புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும், தங்களின் தட்டில் இருக்கும் கார்போஹைட்ரேட் உணவுகளின் அளவோடு ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அளவிலேயே புரதத்தை எடுத்துக் கொள்கிறார்கள்" என்கிறார். மருத்துவர் சொல்வதைத் தற்போதைய மதிய உணவு மாற்றத்தோடு ஒப்பிட்டு, எதார்த்தத்தில் யோசித்துப் பாருங்கள். ஒரு சிறு குழந்தையால் ஒரே ஒரு முட்டையை மிக எளிதாக, ஆசையாக சாப்பிட்டு முடித்துவிட முடியும். ஆனால், அதே புரத அளவை எட்டுவதற்காக அதன் தட்டில் வைக்கப்படும் அதிகப்படியான சோயா துண்டுகளையோ அல்லது பன்னீரையோ, ராஜ்மாவையோ அந்தக் குழந்தையால் முழுமையாக மென்று சாப்பிட முடியுமா? அப்படியே சமைத்துக் கொடுத்தாலும், மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு, ஒவ்வொரு நாளும் தலா 50 கிராம் பன்னீரோ அல்லது அதற்கு இணையான சோயாவோ சமமான அளவில் போய்ச் சேருமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரே அளவில் பன்னீர் போன்ற விலையுயர்ந்த பொருள்களைத் தினமும் தடையின்றி வழங்குவது என்பது நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாத்தியமே இல்லாத ஒன்று. அசைவ புரதம் vs சைவ புரதம்: தரம் ஏன் மாறுபடுகிறது? அசைவ புரதத்தை அப்படியே சைவ புரதத்தைக் கொண்டு மாற்றிவிடுவதால் குழந்தைகளுக்கு அதே சத்துக்கள் கிடைத்துவிடும் என்று சொல்வதெல்லாம் வெறும் பொய்க்கதை. ஊட்டச்சத்து அறிவியலின் படி, புரதத்தின் அளவு வேறு, புரதத்தின் தரம் வேறு. மனித உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாத, உணவின் மூலம் மட்டுமே பெறக்கூடிய 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. நம் உடலின் தசைகள், எலும்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவை ஆரோக்கியமாக வளர இந்த அமினோ அமிலங்கள் மிக முக்கியம். முட்டையில் இந்த ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் மிகச் சரியான விகிதத்தில் கலந்துள்ளன. அதோடு, முட்டை புரதத்தை நம்முடைய உடல் மிக எளிதாக, முழுமையாக ஜீரணித்து உறிஞ்சி கொள்ளும் திறனை கொண்டுள்ளது. இதனால்தான் உலகளவில் புரதச் சத்தை அளவிடுவதற்கான ஒரு சர்வதேச அளவுகோலாகவே முட்டைதான் கருதப்படுகிறது. ஆனால், சோயாவையும் பன்னீரையும் எடுத்துக் கொண்டால் கதை வேறு. பன்னீரில் அமினோ அமிலங்கள் இருந்தாலும், முட்டையை விட அதன் செரிமானத் திறன் குறைவு. தாவரவகை உணவுகளில் சோயா ஒரு முழுமையான புரதம் என்று சொல்லப்பட்டாலும், அதில் இயற்கையாகவே இருக்கும் சில தாவர வேதிப்பொருட்கள் (Anti-nutrients), நம் உடல் அந்தப் புரதத்தை முழுமையாக உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. அதாவது, நீங்கள் சோயா சாப்பிட்டாலும், அதில் இருக்கும் புரதம் முழுமையாக உடலுக்குப் போய்ச் சேருவதில்லை, அதில் பெரும்பகுதி செரிமானம் ஆகாமல் வீணாகிவிடுகிறது. எனவே, எண்களைக் காட்டி இரண்டுமே ஒன்றுதான் என்று வாதிடுவது அறிவியல் பூர்வமாகத் தவறானது. அப்படியென்றால், சைவ உணவுகள் மூலம் முழுமையான புரதத்தைப் பெறவே முடியாதா? என்று ஊட்டச்சத்து நிபுணர் வாணி கிருஷ்ணா அவர்களிடம் வினவியபோது, அவர் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். "நம்முடைய பாரம்பரிய உணவுகளான பருப்பு சாதம் மற்றும் கிச்சடி (Khichdi) ஆகியவை உடலுக்குத் தேவையான முழுமையான புரதத்தை வழங்கும் ஆற்றல் கொண்டவைதான். ஏனெனில், தானியங்களும் பருப்பு வகைகளும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. பருப்பில் சில அமினோ அமிலங்கள் குறைவாக இருக்கும், அதை சாதம் அல்லது பிற தானியங்கள் சமன் செய்து முழுமையான அமினோ அமில அமைப்பாக மாற்றிவிடுகின்றன. ஆனால், இங்கும் நாம் சாப்பிடும் உணவின் அளவு முக்கியமானது. இவற்றுடன் தயிர், பன்னீர், முளைகட்டிய பயிர்கள், காய்கறிகள் அல்லது நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளும்போதுதான் அது குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்தாக மாறும்" என்று கூறினார். பள்ளிக்குழந்தைகளின் தசை வலிமைக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் தேவையான முழுமையான சைவ புரதப் பட்டியலைப் பற்றி மருத்துவர் பேசுகையில், "பால் பொருட்கள், பன்னீர், தயிர், பால், சோயா, டோஃபு, குயினோவா, முளைகட்டிய பயிர்கள், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் வகைகள் மிகச் சிறந்தவை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் தசை வலிமைக்குத் தினமும் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவிலும் ஒரு குறிப்பிட்ட அளவு புரதம் இருக்க வேண்டும்" என்கிறார். இங்குதான் சிக்கல் எழுகிறது. வீட்டில் பார்த்துப் பார்த்துச் சமைக்கும்போது இந்த உணவுச் சமநிலையை நம்மால் கொண்டுவர முடியும். ஆனால், லட்சக்கணக்கான குழந்தைகளுக்குப் பொதுவான ஒரு கூடத்தில் சமைத்து வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில், மருத்துவர் குறிப்பிடும் இந்த உன்னதமான 'உணவுச் சமநிலையை' தினமும் கொண்டு வருவது சாத்தியமா? என்பதுதான் தற்போதைய கேள்வி. மதிய உணவுப் பட்டியலில் இருந்து முட்டையை நீக்கும்போது, குழந்தைகள் இழப்பது வெறும் 6 கிராம் புரதத்தை மட்டுமல்ல, அதோடு சேர்த்து இயற்கை அள்ளித்தந்த பல நுண்ஊட்டச்சத்துக்களையும் (Micronutrients) அவர்கள் இழக்கிறார்கள். ஒரு முட்டையில் புரதத்தை தவிர வைட்டமின் B12, வைட்டமின் D, இரும்புச்சத்து, செலினியம் மற்றும் அயோடின் போன்ற உடலுக்கு இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும், நரம்பு மண்டல செயல்பாட்டிற்கும் மிக முக்கிய தேவையான 'கோலின்' (Choline) என்ற சத்து முட்டையில் மிக அதிக அளவில் உள்ளது. இந்த சத்துக்கள் எவையுமே சோயாவிலோ அல்லது ராஜ்மாவிலோ அந்த அளவிற்கு இல்லை. ரத்த சோகையாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் அவதிப்படும் ஏழை குழந்தைகளுக்கு முட்டை ஒரு வரப்பிரசாதம். அதை மாற்றிவிட்டு, அதற்கு பதில் சோயாவை கொடுப்பது என்பது பிள்ளைகளின் தட்டில் வைக்கும் சத்துக்களைக் குறைப்பதற்குச் சமம். இஸ்கான் அமைப்போடு தொடர்புடைய நிறுவனங்கள் மதிய உணவுத் திட்டத்தில் இத்தகைய சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 'அக்ஷய பாத்ரா' போன்ற அமைப்புகள் மதிய உணவுத் திட்டத்தை இயக்கியபோது, தங்களின் ஆன்மீகக் கொள்கைகளின்படி முட்டை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தவிர்த்தனர். அப்போதே, உணவு உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மத்தியில் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது அதே போன்ற ஒரு விவாதம் மேற்கு வங்கத்திலும் வெடுத்துள்ளது. மதிய உணவுத் திட்டம் என்பது யாருடைய ஆன்மீகக் கொள்கைகளையும், உணவு விருப்பங்களையும் திணிப்பதற்கான களம் அல்ல. அது, நாட்டின் அடித்தட்டு மக்களின் பசியைப் போக்கி, ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கான ஒரு சமூக நலத் திட்டம். வறுமையில் வாடும் ஒரு குழந்தைக்கு, சைவ உணவின் தத்துவங்களைப் பற்றியோ அல்லது கொள்கைகளைப் பற்றியோ கவலையில்லை. அதற்குத் தேவை தன் உடலுக்குத் தேவையான முழுமையான சத்து. சோயாவையும் பன்னீரையும் விட மிகக் குறைந்த செலவில், மிக எளிய முறையில் குழந்தைகளுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய ஆற்றல் முட்டைக்கு மட்டுமே உண்டு. எனவே, முட்டையை நீக்கிவிட்டு சைவ மாற்றுகளைத் தேடுவது என்பது ஊட்டச்சத்து சமநிலையைக் குலைப்பதோடு, ஏழைக் குழந்தைகளின் ஆரோக்கியத்தோடு விளையாடும் ஒரு ஆபத்தான முயற்சியாகவே முடியும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு சவாலாகும் 'இன்டோர்' வாழ்க்கை முறை - எச்சரிக்கும் ஆய்வு! மனம் எப்போதும் கெட்டதையே யோசிப்பது ஏன்? உண்மையான காரணம் என்ன? டைப்பிங் செய்யும் தலைமுறை: கைகளால் எழுதுவதை மறந்தால் மூளைக்கு ஆபத்தா?
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 9:36 pm
Posted By : ADMIN
முட்டைக்கு மாற்றாகுமா சோயாவும் பன்னீரும்? மேற்கு வங்க மதிய உணவு திட்ட முடிவால் ஊட்டச்சத்து சமநிலை கெடுமா?