Date : 26 June 2026, 9:34 pm
Posted By : ADMIN

முதல் டி20: அயர்லாந்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு; வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமில்லை

முதல் டி20: அயர்லாந்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு; வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமில்லை

ஹைதராபாத்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களம் காண்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, இந்திய அணி பங்கேற்கும் முதல் சர்வதேச டி20 தொடர் இது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்றிருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி, பெல்பாஸ்ட்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மறுபக்கம் அயர்லாந்து அணியி ஜெய் முந்த்ரா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராகத் தோல்வியே கண்டிராத இந்திய அணி, இப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றன. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த எட்டிலும் இந்திய அணியே முழுமையாக வெற்றி பெற்று, தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா. அயர்லாந்து: டிம் டெக்டர், ராஸ் அதிர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் (கேப்டன்), ஜார்ஜ் டாக்ரெல், கேரத் டெலானி, பெஞ்சமின் கேலிட்ஸ், லியாம் மெக்கார்த்தி, மேத்யூ ஹம்ப்ரீஸ், ஜெய் முந்த்ரா, மேத்யூ ஹோலார்ட்