நெல்லை: கத்தார் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சத்தை உருக செய்வதாக இருந்தது. கத்தாரில் உள்ள ராஸ் லப்பான் தொழிற்பேட்டையில் பர்சான் எரிவாயு தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் கணிசமானோர் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த பபித் (26), பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் (24), அழகிய நம்பியாபுரத்தைச் சேர்ந்த சுபின் (25) ஆகிய மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, அவர்களின் உடல்கள் விமானம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) திருவனந்தபுரம் வந்தடைந்தன. பின்னர் ஆம்புலனஸ் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், பணகுடி அழகிய நம்பிபுரத்தைச் சேர்ந்த சுபினின் உடலுக்கு, துணை தாசில்தார் குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல், சிவகாமிபுரத்தை சேர்ந்த சஜித்குமார் வீட்டிற்கு ராதாபுரம் தாசில்தார் வில்லுடையார், பழவூரை சேர்ந்த பவித் வீட்டிற்கு தாசில்தார் சுப்புலட்சுமி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்த நிலையில், மூவரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டன. அவர்களின் உடல்களை கண்டு, உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரின் நெஞ்சத்தையும் உருகச் செய்வதாக இருந்தது. முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இந்த நிவாரணத் தொகைக்கான காசோலையை ராதாபுரம் தொகுதி தவெக எம்எல்ஏ கிறிஸ்டோபர் கடந்த 23-ம் தேதி அவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 9:32 pm
Posted By : ADMIN
கத்தார் ஆலை விபத்து: உயிரிழந்த நெல்லை இளைஞர்கள் 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் நல்லடக்கம்