Date : 26 June 2026, 8:51 pm
Posted By : ADMIN

சிவகங்கையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு: ரூ.60 ஆயிரம் நிவாரணம்!

சிவகங்கையில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு: ரூ.60 ஆயிரம் நிவாரணம்!

தேவகோட்டை தாலுகாவில் ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட 2 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை ரூ.60 ஆயிரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து மீட்பு சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் ஆடு மேய்க்கும் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட 2 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.60 ஆயிரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், வழங்கி தெரிவிக்கையில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை தொடர்பாக கொத்தடிமைத் தொழிலாளர் முறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கான நலச்சங்க சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் திரு.தங்கவேலு த/பெ அம்மாசி என்பவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 24.06.2026 அன்று நேரில் அளித்த புகார் மனுவினைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட கொத்தடிமைத் தொழிலாளர் முறை விழிப்புணர்வு கண்காணிப்புக்குழுவினர் 24.06.2026 அன்று மாலை 5.30 மணிக்கு சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, திருப்பாக்கோட்டை குரூப், புலிக்குளம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விடுதலைச் சான்று வழங்கப்பட்டது. மேற்கண்ட ஆய்வில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெத்தநாச்சிபுரம் என்ற முகவரியைச் சேர்ந்த தங்கராசு மற்றும் அவரது மனைவி ஆதியம்மாள் ஆகிய இருவரையும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக வைத்துள்ளார் என்பது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அவர்களால் விடுதலைச் சான்று வழங்கப்பட்டது. கொத்தடிமை மறுவாழ்வு நிதியிலிருந்து பணம் மீட்கப்பட்ட 2 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதியிலிருந்து தலா ரூ.30,000/- வீதம் 2 நபர்களுக்கு ரூ.60,000/- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.மேலும், மேற்கண்ட தங்கராசு மற்றும் அவரது மனைவி ஆதியம்மாள் ஆகிய இருவரையும் ஆடுமேய்க்கும் தொழிலில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக பணியில் வைத்திருந்த சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, காளையார்கோவிலைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் மீது கொத்தடிமைத் தொழிலாளர் (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் தேவகோட்டை தாலுகா, திருப்பாக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலரால் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.