Date : 26 June 2026, 8:50 pm
Posted By : ADMIN

சென்னை அருகே சாம்பலான ஆம்னி பேருந்து... 36 பயணிகள் தப்பியது எப்படி?

சென்னை அருகே சாம்பலான ஆம்னி பேருந்து... 36 பயணிகள் தப்பியது எப்படி?

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற ஆம்னி பேருந்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் இருந்து 36 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 36 பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் சொகுசு பேருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அதிகாலை 6 மணி அளவில் சோழவரம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பேருந்தின் முன்புறம் திடீரென தீப்பொறி வந்தது. இதைக் கண்ட ஓட்டுநர் சுந்தர் உடனடியாக தீயணைப்பானை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது தீ மளமளவென பரவி உள்ளது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் அவசரமாக கீழே இறக்கி விட்டுள்ளார். சோழவரம் காவல் துறை மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செங்குன்றம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 2 தீயணைப்பு நிலையங்கலில் இருந்து வந்த வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த விதமான காயமின்றி உயிர் தப்பினர். ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநர் சுந்தர் சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளை உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திராவில் உள்ள பேருந்து நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு மாற்று பேருந்து வர வைக்கப்பட்டு 36 பயணிகளும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பயணிகளின் உடமைகள் முழுவதும் தீயில் கருகி சேதமானது. தீ விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.