மயிலாடுதுறை: சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரம்மாண்ட மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஆனால், இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்குத் திரும்பி வர வாகன வசதி செய்து தராததால், அவர்கள் மீண்டும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற அவலமும், அவசர கால 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மாணவிகள் லிப்ட் கேட்டுப் பயணித்த அதிர்ச்சிச் சம்பவமும் அரங்கேறியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்’ (Start Run Stop Drugs) 2026 என்ற தொனிப்பொருளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் நடை ஓட்டம் இன்று (26.06.2026) மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை சாய் (SAI) விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்னேகா பிரியா மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளர் எம்.செந்தில் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் முன்னிலை வகித்தனர். "போதைப்பொருள் இல்லாத தமிழகம்" என்ற உன்னத இலக்கை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த ஓட்டத்தில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சாய் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த ஓட்டம் தருமபுரம் சாலை வழியாகச் சென்று, சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நிறைவடைந்த பிறகுதான் நிர்வாகத் தரப்பின் அலட்சியம் வெளிப்படத் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்த அதிகாரிகள், அவர்கள் மீண்டும் நகரப் பகுதிக்குத் திரும்புவதற்கான எவ்வித போக்குவரத்து வசதிகளையும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு போதிய அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. 5 கிலோ மீட்டர் தூரம் மூச்சிரைக்க ஓடி வந்து களைப்படைந்திருந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தங்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் ஏதேனும் வரும் என்று நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், எந்தவொரு அரசுப் பேருந்தோ அல்லது சிறப்பு வாகனங்களோ வராததால் மாணவர்கள் கடும் வேதனைக்குள்ளாயினர். களைப்பு நீங்குவதற்குள், வேறு வழியின்றி மாணவர்கள் மீண்டும் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயிலாடுதுறை நகரப் பகுதிக்கு சுட்டெரிக்கும் வெயிலில் கால்நடையாக நடக்கத் தொடங்கினர். அப்போது, தங்களுக்குக் கிடைத்த லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களில் மாணவர்கள் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றனர். இதன் உச்சகட்டமாக, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவசர கால ‘108’ ஆம்புலன்ஸ் வாகனத்தில் சில பள்ளி மாணவிகள் வேறு வழியின்றி லிப்ட் கேட்டு ஏறி, பயணித்த அவலம் நிகழ்ந்தது. ஆம்புலன்ஸின் பின்பக்கக் கதவைத் திறந்து கொண்டு மாணவிகள் ஆபத்தான முறையில் பயணித்த இந்தக் காட்சிகள், அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ மாவட்ட நிர்வாகத்தின் போலிப் பெருமிதங்களைத் தோலுரித்துக் காட்டுவதாகப் பொதுமக்கள் கொந்தளித்துப் பேசுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “அரசு சார்பாக இதுபோன்ற தொலைதூர விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் போது, மாணவர்களின் பாதுகாப்பிலும், அவர்களின் போக்குவரத்து வசதியிலும் அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். 5 கி.மீ ஓடி முடித்த பிள்ளைகளை மீண்டும் 5 கி.மீ நடக்க விட்டது அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தைக் காட்டுகிறது. அவசரச் சிகிச்சைக்கான ஆம்புலன்ஸில் மாணவர்கள் பயணிக்கும் நிலையை ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில், இதுபோன்ற போட்டிகளை நடத்தும் போது, முறையான பேருந்து வசதிகளைச் செய்து தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். மாநில அளவில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தாரக மந்திரமாகப் பேசப்படும் வேளையில், அதற்குத் திரண்ட மாணவர்களைப் பாதுகாப்பாக வீடு சேர்க்கத் தவறிய மயிலாடுதுறை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இந்தச் செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 8:45 pm
Posted By : ADMIN
ஆட்சியர் தொடங்கி வைத்த மாரத்தான்; ஆம்புலன்ஸில் முடிந்த அவலம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?