Date : 26 June 2026, 8:32 pm
Posted By : ADMIN

FIFA: ஐவரி கோஸ்ட் புதிய வரலாறு.. குராசோவை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பை அடுத்த சுற்றுக்கு தகுதி

FIFA: ஐவரி கோஸ்ட் புதிய வரலாறு.. குராசோவை வீழ்த்தி முதல்முறையாக உலகக் கோப்பை அடுத்த சுற்றுக்கு தகுதி

நியூயார்க்: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் இ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், குராசோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஐவரி கோஸ்ட் அணி, தனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2006 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் 3 முறை உலகக் கோப்பை லீக் சுற்றுடன் வெளியேறிய ஐவரி கோஸ்ட் அணிக்கு, நேற்று நடைபெற்றது வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் குராசோ அணியின் தற்காப்பு வீரர்கள் செய்த தவற்றைப் பயன்படுத்திய 19 வயது இளம் வீரர் யான் தியோமண்டே கொடுத்த பாஸை, நிக்கோலஸ் பேபே எளிதாக கோலாக்கினார். இதனால் ஐவரி கோஸ்ட் 1-0 என முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் இப்ராஹிம் சங்காரே கொடுத்த அசாத்திய பாஸைப் பெற்றுக்கொண்ட நிக்கோலஸ் பேபே, தனது இரண்டாவது கோலை பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் ஐவரி கோஸ்ட் 2-0 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்த 5வது ஐவரி கோஸ்ட் வீரர் என்ற பெருமையை பேபே பெற்றுள்ளார். இதற்கு முன்பு திதியர் துரோக்பா, கெர்வின்கோ போன்ற ஜாம்பவான்கள் இச்சாதனையைப் படைத்துள்ளனர். டிக் அட்வகாட்டின் பயிற்சியின் கீழ் விளையாடிய குராசோ அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனியிடம் 7-1 என படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு, ஈக்வடார் அணிக்கு எதிராக 1 புள்ளியைப் பெற்று மிகச் சிறப்பாகவே போராடி இருந்தது. தற்போது ஐவரி கோஸ்ட் அணியிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம் ஐவரி கோஸ்ட் அணி 6 புள்ளிகளுடன் குரூப் இ பிரிவில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அவர்கள் தங்களது அடுத்த நாக் அவுட் போட்டியில் டெக்சாஸின் ஆர்லிங்டன் நகரில் குரூப் ஐ பிரிவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணியை எதிர்கொள்ள உள்ளனர்.