சென்னை: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானை தொடக்கி வைத்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மெரினா கடற்கரை சாலையில் மக்களோடு மக்களாக மாரத்தான் ஓட்டத்திலும் பங்கேற்றார். சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘start run, stop drugs’ என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே, இந்த மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. மாரத்தானை தொடங்கி வைத்ததோடு, மக்களோடு மக்களாக இணைந்து முதலமைச்சரும் ஓட்டத்தில் பங்கேற்றார். அவருடன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த், நிதியமைச்சர் மரிய வில்சன், உணவு பாதுகாப்புத்துறை வெங்கட்ரமணன் ஆகிய அமைச்சர்களும் பங்கேற்றனர். மேலும், டிஜிபி, காவல் ஆணையர், தலைமை செயலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சருடன் பங்கேற்றனர். முன்னணி விளையாட்டு, வீரர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புடைசூழ ஓடிய முதலமைச்சர், ஓடியவாறே தண்ணீர் குடித்துவிட்டு, அருகில் சென்ற பெண்களுக்கும் தண்ணீர் வழங்கினார். மாரத்தான் ஓட்டத்தை தொடங்குகையில், ’நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்’. ‘போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் அதிலிருந்து வெளிவர எனது பங்களிப்பை தருவேன்’. ‘தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை வேரறுக்க துணை நிற்பேன்’ போன்ற உறுதிமொழியை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் ஏற்றனர். போதைப் பொருளை ஒழிக்க தீவிரம் காட்டும் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்க, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறிவந்தார். அவர் கூறியபடியே, முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே போதைப் பொருட்களை ஒழிக்க த.வெ.க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதோடு, அரசு சார்பில் பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சராக பொறுப்பேற்றவுடனே, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமாக போதைப் பொருள் தடுப்பு பணி பிரிவுகளை உருவாக்கினார் விஜய். இதன்கீழ், தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்துவோர் மற்றும் கடத்தலில் ஈடுபட்டு விநியோகம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறுகிற மாரத்தான் போட்டியில் முதலமைச்சரும் பங்கேற்றுள்ளார்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 8:23 pm
Posted By : ADMIN
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு - மக்களோடு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்