Date : 26 June 2026, 8:19 pm
Posted By : ADMIN

டிஜி20 லீக்: பலமுறு ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

டிஜி20 லீக்: பலமுறு ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஹைதராபாத்: மெடாக் ஃபால்கன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பலமுறு ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் நடத்தும் முதலாவது சீசன் 'டிஜி20' (TG20) தெலுங்கானா டி20 பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-ஆவது லீக் போட்டியில் மெடாக் ஃபால்கன்ஸ், பலமுறு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பலமுறு ஸ்டிரைக்கர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மெடாக் ஃபல்கன்ஸ் அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் கௌகுலாமாரி ஒரு ரன்னில் அவுட்டானார். பின்னர் 2வது ஓவரில் அகர்வால் மூன்று பவுண்டரிகள் அடித்தார். தொடர்ந்து 3-ஆவது ஓவரில் அவர் 2 சிக்சர்கள் விளாசிய நிலையில், ரவி கிரண் பந்துவீச்சில் 21 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து அஷ்வின் ராம் 12 ரன்களுக்கு ரிட்டயர்டு ஹர்ட் (Retired hurt) ஆனார். பின்னர் ரவி தேஜா 13 ரன்களுக்கு அவுட்டானார். இறுதியில் மெடாக் ஃபல்கன்ஸ் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக விக்ரம் நாயக் (36), வருண் ஏரம் (36) ரன்கள் எடுத்தனர். கடினமான இலக்கை விரட்டிய பலமுறு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் 2வது பந்தில் ஏரம் பந்துவீச்சில் கரண் யாதவ் டக் அவுட்டானார். பின்னர் பிரக்னய் ரெட்டி அதிரடியாக ஆடினார். 15 ரன்கள் எடுத்த பிரக்னய் ரெட்டி ஏரம் பந்துவீச்சில் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து விக்னேஷ் ரெட்டி, ரோகித் ராயுடு ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். இந்த நேரத்தில் பந்துவீச வந்த கஸி அப்பாஸ் விக்னேஷ் ரெட்டி (39) விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் வந்த ஷதப் அகமது 3 ரன்களுக்கு அவுட்டானார். சற்று நேரம் அதிரடியாக ஆடிய புடிதி தேஜா (23) ரவி க்தேஜா பந்துவீச்சில் அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுபக்கம் உறுதியாக நின்று ஆடிய ரோகித் ராயுடு அவுட்டாகாமல் அரைசதம் (54) அடித்து, பலமுறு ஸ்டிரைக்கர்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.