Date : 26 June 2026, 8:17 pm
Posted By : ADMIN

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இந்தியாவின் தற்போதைய நிலையும், எதிர்கால சவால்களும்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இந்தியாவின் தற்போதைய நிலையும், எதிர்கால சவால்களும்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா சபை அறிவித்த எத்தனையோ தினங்களை போல இதுவும் கடந்து போகும் ஒரு நாளாக நாம் நினைத்துவிடக் கூடாது. 1987-லிருந்தே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் ஆபத்தும் வலியும் இன்னும் குறையவில்லை. போதைப்பொருள் என்பது ஒரு தனிமனிதனை மட்டும் அழிப்பதில்லை, ஒட்டுமொத்த குடும்பத்தையும், சமுதாயத்தையே சீரழிக்கிறது. பொதுவாக, போதைப் பழக்கம் என்பது ஏதோ சினிமாக்களிலோ அல்லது யாருக்கோ நடக்கும் ஒரு விஷயம் என்றுதான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், பஞ்சாபில் ஒரு தாய் தனது நான்கு மகன்களை போதைக்கு ஏற்கனவே பறிகொடுத்துவிட்டு, ஐந்தாவது மகனையும் அடுத்த இரண்டு நாட்களில் இழந்த சோகம் நமக்குப் பெரிய அதிர்ச்சியை தருகிறது. இது ஏதோ பக்கத்து வீட்டுச் செய்தி அல்ல, நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் நடக்கக்கூடிய ஆபத்து என்பதை உணர்த்துகிறது. கடந்த ஒரு வாரமாக, ஈடிவி பாரத் (ETV Bharat) தனது 'போதைக்கு எதிரான பாரதம்' (Bharat Against Drugs) என்ற பரப்புரை மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, இந்த போதைப்பொருள் பிரச்சனை எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதை ஆழமாகப் பதிவு செய்துள்ளது. ஹிமாச்சல் முதல் கேரளா வரையிலும், பீகார், மகாராஷ்டிரா, அசாம், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் கள ஆய்வு செய்து திரட்டப்பட்ட தகவல்கள், நாம் உடனே விழித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்துகின்றன. முதலில், இந்த பிரச்சனையின் அளவை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் சுமார் 37 கோடி மக்கள் ஏதோ ஒரு வடிவத்தில் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு பல லட்சம் கோடிகள். ஒரு குடும்பத்தில் யாராவது போதைக்கு அடிமையாகிவிட்டால், அவர்களை மீட்கவும், அவர்களின் பழக்கத்திற்கு பணம் கொடுக்கவும் சொத்துகளையும் நகைகளையும் விற்று நடுத்தெருவுக்கு வரும் நிலைக்குக் குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. பஞ்சாப் மாநிலம் இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை துல்லியமாகக் கண்டறிய, வீடு வீடாகச் சென்று ஒரு சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. மக்கள் தொகை, வீடுகள், ஆடு மாடுகளைக் கணக்கெடுப்பது போல, போதைக்கு அடிமையானவர்களையும் கணக்கெடுக்கிறார்கள். ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், முதலில் அதன் தீவிரம் எவ்வளவு என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சில குடும்பங்கள் உண்மையை சொல்ல மறுத்தாலும், பிரச்சனையை மூடி மறைக்காமல் அதை எதிர்கொள்ளும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இதேபோல், ஹிமாசலப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் போதைக்கு அடிமையானதை பெற்றோர்கள் மிகத் தாமதமாகவே உணர்கிறார்கள். குழந்தைகளின் தூக்கமின்மை, படிப்பில் கவனம் குறைவது, தேவையற்ற செலவுகள், திடீர் கோபம் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருப்பது ஆகியவை இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள். போதை மறுவாழ்வு மையங்களுக்குக் குழந்தைகளைக் கொண்டு செல்வதற்கு முன்பே, வீட்டிலும் பள்ளியிலும் அவர்களைக் கவனித்து, அன்பாகப் பேசுவதே இதற்கான முதல் தடுப்புச் சுவர் என்பதை நாம் உணர வேண்டும். பீகார் மாநிலத்தின் நிலைமை நமக்கு வேறொரு பாடத்தை கற்றுத் தருகிறது. அங்கு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், சட்டத்தினால் மட்டுமே போதையை ஒழித்துவிட முடியாது என்பதை பீகார் நிலவரம் காட்டுகிறது. போதைக்கான அடிப்படை காரணங்களான மன அழுத்தம், சரியான வழிகாட்டுதல் இல்லாமை போன்றவற்றைத் தீர்க்காமல், ஒன்றை மட்டும் தடை செய்தால் மனிதர்கள் மாற்றுப் போதைப்பொருட்களைத் தேடி ஓடத் தொடங்கிவிடுகிறார்கள். சட்டம் என்பது அணுகுமுறையை மாற்றலாமே தவிர, மனிதர்களின் மனநிலையை முழுமையாக மாற்றாது. மறுபுறம், மகாராஷ்டிராவில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து போதைக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அரசாங்கமும் போலீசாரும் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அக்கம் பக்கத்தினர், ஆசிரியர்கள், நண்பர்கள் மூலமாகவே ஒருவரது போதைப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். அவர்கள் பாதாளத்தில் விழுவதற்கு முன், ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு காப்பாற்ற இந்த மக்கள் பங்கேற்பு மிகவும் அவசியமாகிறது. போதைப்பொருட்கள் எப்படி நம் ஊருக்குள் வருகின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியா புவியியல் ரீதியாக ஆபத்தான இரண்டு போதைப்பொருள் உற்பத்திப் பகுதிகளுக்கு (Golden Crescent - ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் Golden Triangle - மியான்மர், லாவோஸ், தாய்லாந்து) இடையில் அமைந்துள்ளது. சர்வதேச எல்லையைக் கடந்து வரும் இந்த நச்சுப் பொருட்கள், காடுகள், மலைகள், துறைமுகங்கள் வழியாக மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு கடத்தப்படுகின்றன. குறிப்பாக, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்கள் (Dhabas) மற்றும் தங்கும் விடுதிகள் மூலமாக இந்த நெட்வொர்க் ரகசியமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவின் நெடுஞ்சாலைகள் நாட்டின் வளர்ச்சியை எப்படி காட்டுகிறதோ, அதே நெடுஞ்சாலைகளின் நிழலில் இந்த சட்டவிரோத வர்த்தகமும் நடப்பதுதான் கசப்பான உண்மை. இந்த ஒரு வார காலத் தொடரைத் திரும்பிப் பார்க்கும்போது, போதைப்பொருள் என்பது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல என்பது புரிகிறது. அது சுகாதாரம், மனநலம், குடும்பப் பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த பிரச்சனை. கடத்தல்காரர்களைக் கைது செய்வதும், போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்வதும் ஒருபுறம் நடந்தாலும், அது மட்டுமே இந்த யுத்தத்தில் முழுமையான வெற்றியைத் தராது. இளைஞர்களுக்கான நல்வாய்ப்புகள், குடும்பங்களின் ஆதரவு, பள்ளிகளின் விழிப்புணர்வு மற்றும் அரசின் சரியான திட்டமிடல் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வெறும் சட்டங்களாலோ அல்லது தண்டனைகளாலோ மட்டும் ஒரு சமூகத்தை மாற்றிவிட முடியாது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் என்பது வெறும் போதைக்கு எதிரான நாள் மட்டுமல்ல, அது நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நாள். போதைப்பாதைக்குச் செல்லவிருந்த ஒரு இளைஞனைத் திசைதிருப்பி மீட்டெடுப்பது என்பது, ஒரு உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே மீட்டெடுப்பதாகும். தன் ஐந்து மகன்களையும் பறிகொடுத்த பஞ்சாப் தாயின் துயரம், இழந்த உயிர்களை பற்றியது மட்டுமல்ல, அவர்கள் வாழ வேண்டியிருந்த எதிர்காலத்தைப் பற்றியது. இந்த பிரச்சனைக்கு எளிமையான தீர்வுகள் எதுவும் இல்லை. குடும்பங்கள், சமூக அமைப்புகள், பள்ளிகள், மருத்துவத் துறை மற்றும் அரசு என அனைவரும் இணைந்து உழைக்க வேண்டிய கடினமான களம் இது. பிரச்சனையை மூடி மறைக்காமல், அதை நேருக்கு நேர் பார்த்து, பேசி, புரிந்து கொண்டு, ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கும்போதுதான் இதற்கான தீர்வு பிறக்கும்.