தமிழகத்தில் விரைவில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) போட்டியிட வாய்ப்புக் கேட்டு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து இணைந்தவர்கள் மத்தியில் மிகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த த.வெ.க. தலைவரான முதல்வர் விஜய், தற்போது இந்த இடைத்தேர்தலில் யாருக்கு 'சீட்' வழங்குவது என்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சித் தலைமையுடன் ஆலோசித்து வருகிறார். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் காலியான பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் ஆறு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, த.வெ.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) இத்தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் எழில் கேத்தரின் இந்த முறையும் இங்கு போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். அதே நேரத்தில், அ.தி.மு.க-வில் இருந்து விலகி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்த மரகதம் என்பவரும் இத்தொகுதியைக் குறிவைத்துக் கேட்பதால், இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இதனால் யாருக்குத் தொகுதியை ஒதுக்குவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக நெருக்கமான அருணாசலம் என்பவருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று த.வெ.க-வின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், இதற்குப் போட்டியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் உள்ளிட்டோரும் தங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் மல்லுக்கட்டி வருகின்றனர். இதேபோல், தாராபுரம் தொகுதியில் கவுரி சித்ரா மற்றும் பதவியை ராஜினாமா செய்த சத்யாபாமா ஆகிய இருவருக்கும் இடையே சீட் வாங்குவதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா, த.வெ.க சார்பில் களம் இறங்கத் தயாராகி வருகிறார். ஆனால், அவருக்கு அங்குள்ள தொகுதி நிலவரம் சாதகமாக இல்லை எனக் கூறி, அவருக்கு சீட் தர த.வெ.க. தலைமை தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜகோபால் மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு இடையே அந்தத் தொகுதியைக் கைப்பற்றுவதில் பலப்பரீட்சை தொடங்கிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிகவும் உற்று நோக்கப்படும் விராலிமலை தொகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைய உள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அவருக்கு மீண்டும் அதே தொகுதியில் சீட் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரின் வருகை தனக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என த.வெ.க. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான முகமது பர்வேஸ் நினைக்கிறார். இதன் காரணமாக, "விஜயபாஸ்கர் கட்சிக்குள் வந்தாலும் அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது" என்று கட்சித் தலைமைக்கு பர்வேஸ் தரப்பில் இருந்து பலத்த முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. த.வெ.க-வை நம்பிப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கோ அல்லது கட்சிக்காக ஆரம்பத்தில் இருந்தே உழைத்த சொந்த கட்சி நிர்வாகிகளுக்கோ - இதில் யாருக்குச் சீட் கொடுத்தாலும் மற்றொரு தரப்பினர் அதிருப்தி அடைவார்கள் என்ற சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்புக்குமே வாய்ப்பு மறுக்கப்பட்டால் கட்சித் தலைமை மீதுள்ள நம்பிக்கை போய்விடும் என்பதால், த.வெ.க தலைமை இறுதி முடிவு எடுக்க முடியாமல் கடும் திணறலில் ஆழந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 7:51 pm
Posted By : ADMIN
தவெக-வில் இடைத்தேர்தல் சீட் பெறக் கடும் போட்டி: வேட்பாளர் தேர்வில் தலைமைக்கு முற்றும் நெருக்கடி