Date : 26 June 2026, 7:29 pm
Posted By : ADMIN

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தர முன்வந்தது உண்மையெனில் அது அரசியல் மோசடி - வைகோ காட்டம்

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தர முன்வந்தது உண்மையெனில் அது அரசியல் மோசடி - வைகோ காட்டம்

மதுரை: அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால், அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது என வைகோ கூறியுள்ளார். மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, "சில மாதங்களில் முதலமைச்சர் விஜய் அனைத்தையும் கற்று தேர்ந்து, தெளி வு பெற்றுவிடுவார் என நம்புகின்றேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதைப் பற்றி நான் கமெண்ட் அடிக்க முடியுமா? அதைப் போலத்தான் முதலமைச்சர் விஜய் பேசுவதை பற்றியும் கமெண்ட் செய்ய விரும்பவில்லை. மக்கள் நலனுக்காக கருவேல மர ங்களை அகற்றி வருகிறோம். இந்த வேலையில் ஈடுபடுவதால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது. இருந்தும் தமிழ்நாட்டின் நலனுக்காக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கருவேல மரங்களை அகற்றும் வேலையை செய்கிறேன். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் ஓர் முயற்சியாகவும் இதை மதிமுக செய்து வருகிறது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. விமர்சனம் செய்வது ஆ.ராசாவின் பாணி. வரும் 27 ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூடுகிறது. அந்த பொதுக்குழுவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன், மந்திரி சபையில் சேர்ந்துவிட்டேன் மற்றும் திமுக-விலேயே இருக்கிறோம் என சிலர் கூறி வருகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதுபற்றி கருத்து சொல்லவும் நான் விரும்பவில்லை. விவசாயிகள் போராடுவது அவர்களின் உரிமை. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராடுகிறார்கள். இதை பரிசீலித்து ஆவணம் செய்வது அரசின் கடமை, முதலமைச்சரின் கடமை. திமுக, எங்களை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தியது. எங்கள் சுயமரியாதையையும், தன் மானத்தையும் இழந்து தான் திமுக கூட்டணியில் கடந்து ஒன்பது ஆண்டுகளாக பயணித்தோம். அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால், அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது" என்று வைகோ கூறினார்.