Date : 26 June 2026, 7:24 pm
Posted By : ADMIN

போர்க்கொடி தூக்கி பின்னர் சமாதானமான எஸ்.பி.வேலுமணி: மீண்டும் பதவி கொடுத்த இபிஎஸ்

போர்க்கொடி தூக்கி பின்னர் சமாதானமான எஸ்.பி.வேலுமணி: மீண்டும் பதவி கொடுத்த இபிஎஸ்

சென்னை: தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, பின்னர் சமாதானமாக சென்ற எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவி வழங்கியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த சூழலில், அதிமுக தலைமைக்கு எதிராக சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கினர். மேலும், தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அந்த எம்எல்ஏக்களை அவர்கள் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக்கி வைத்தார். தொடர்ந்து, எடப்பாடி அணி, எஸ்பி வேலுமணி அணி என இரு அணிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்களை வெளிப்படுத்தினர். இருப்பினும், கட்சியின் நலன் கருதி இருதுருவங்களாக இருந்து வந்த இரண்டு அணியினரும் மீண்டும் ஒரே அணியாக செயல்பட துவங்கினர். ஓரணியாக செயல்பட துவங்கிய பின்னரும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எஸ்பி வேலுமணிக்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு வந்தது. மேலும், எஸ்.பி. வேலுமணியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகள் மீண்டும் வழங்காததால் அரசியல் ரீதியாக அது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. மேலும், மீண்டும் அதிமுகவில் பிளவு ஏற்படுமோ என்ற கருத்தும் பரவி வந்தது. இந்த சர்ச்சைகளுக்கெள்ளாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது எஸ்.பி. வேலுமணிக்கு புதிய பொறுப்பை வழங்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வழங்கியுள்ளார். அதேபோல், முன்னாள் அமைச்சர் காமராஜ், தங்கமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக துணை பொதுச் செயலாளராக நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கழகத் தலைமை நிலைய செயலாளராக வரகூர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர்களாக தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி, கோ. அரி, கிருஷ்ணமுரளி, மருதராஜ், பி சௌந்தர்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள், அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் இணைச்செயலாளர் ஆகியோரை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.