Date : 26 June 2026, 11:14 pm
Posted By : ADMIN

கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: பயிற்சியாளர் மீது பாய்ந்தது போக்சோ

கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை: பயிற்சியாளர் மீது பாய்ந்தது போக்சோ

சென்னை: கபடி வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அவரது பயிற்சியாளர் ராஜு என்பவர் மீது காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2025 பஹ்ரைனில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் கபடி போட்டியில், இந்திய அணி தங்கம் வென்றது. இந்த வெற்றிக்கு சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளம் வீராங்கனை முக்கிய பங்காற்றினார். அவருக்கு பயிற்சி அளித்ததன் மூலம் தமிழகம் முழுவதும் கபடி பயிற்சியாளர் ராஜு பிரபலமானார். கண்ணகி நகரில் இருக்கும் பல மாணவர்களுக்கு ராஜு கபடி பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில், தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 17 வயது சிறுமியை ராஜு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தன் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜு, தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கல்வியிலும், விளையாட்டிலும் முன்னேறி வரும் கண்ணகி நகர் பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சியாளருக்கு ஆதரவு: இந்த நிலையில், பஹ்ரைனில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளம் வீராங்கனை தமது பயிற்சியாளருக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது பெற்றோர் பல வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் நான் வெற்றி பெற்றபோது எனக்கு கிடைத்த பணத்தின் மீது எங்கள் தாய் அதிகம் ஆசை கொண்டு அந்த பணத்தை வேறு வழியில் பயன்படுத்த முயன்றார்" எனவும் கூறியுள்ளார். "எங்கள் வளர்ச்சியின் மீது பொறாமை பட்டு ஒரு சிலர் எங்களையும் எங்கள் பயிற்சியாளரையும் பிரிப்பதற்காக போட்டுள்ள திட்டம் தான் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு" என்று பேசியுள்ளார். பயிற்சியாளருக்கு ஆதரவாக பேசியுள்ள வீராங்கனையும், அதே பயிற்சியாளர் மீது புகார் கொடுத்துள்ள இளம் வீராங்கனையும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கபடி பயிற்சியாளர் ராஜுவின் சொந்த ஊர் புதுச்சேரி. 22 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கண்ணகி நகரில் ராஜு குடியேறினார். 10 ஆண்டுகளாக கபடி பயிற்சியாளராக இருந்து வருகிறார்.