Date : 26 June 2026, 6:55 pm
Posted By : ADMIN

ஃபிஃபா உலகக்கோப்பை 2026: மெக்சிகோ, தென்னாப்பிரிக்க அணிகள் அபார வெற்றி

ஃபிஃபா உலகக்கோப்பை 2026: மெக்சிகோ, தென்னாப்பிரிக்க அணிகள் அபார வெற்றி

ஹைதராபாத்: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 'குரூப் ஏ' பிரிவின் கடைசி லீக் ஆட்டங்களில், மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 'குரூப் ஏ' அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியில், மெக்சிகோ மற்றும் செக் குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் பதிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து கோல்களையும் பதிவு செய்து அசத்தியது. அதன்படி, ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் மேடியோ சாவேஸ், 61ஆவது நிமிடத்தில் ஜூலியன் குய்னோன்ஸ் மற்றும் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+4ஆவது நிமிடத்தில் ஆல்வாரோ ஃபிடால்கோ ஆகியோர் கோல்களைப் பதிவு செய்து அசத்தினர். மறுபக்கம் இறுதிவரை போராடிய செக் குடியரசு அணியால், எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியவில்லை. இதன் மூலம் மெக்சிகோ அணி, ஆட்டநேர முடிவில் செக் குடியரசு அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி, ஹாட்ரிக் வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற மற்றொரு 'குரூப் ஏ' பிரிவு ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் டெபோஹோ மோகோனா 63ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தி, த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளுடன் 'குரூப் ஏ' பிரிவில் இரண்டாம் இடம்பிடித்த தென்னாப்பிரிக்க அணி, ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.