Date : 26 June 2026, 6:52 pm
Posted By : ADMIN

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

கரூர்: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சாலை பணிகளில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தி.மு.க-வின் முன்னாள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எ.வ. வேலு மீது கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைதுறையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமல் 3.23 கோடி ரூபாய் முறைகேடு நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த புதிய வழக்கின் அடிப்படையில், இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அவரது அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், கரூரில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்கள் என லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுப்பணித்துறை அரசு ஒப்பந்ததாரரும் கரூர் மாவட்டத்தின் முக்கிய புள்ளியாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சங்கர் ஆனந்த் வீட்டில் இன்று காலை 8 மணி அளவில், இரண்டு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் ஒப்பந்ததாரர் கார்த்தி வீடு, பள்ளப்பட்டியில் உள்ள ரஃபீக் என்பவரது வீடு என கரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகின்றனர். முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரில், மாநில நெடுஞ்சாலை துறையின் திட்டத்தின் கீழ் கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சில சாலை பணிகளில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், முடிந்ததாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்த நிறுவனத்திற்கு அரசு பணம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் ஆதாரங்களை மறைக்கும் வகையில் அவசர அவசரமாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விரிவான விசாரணை நடத்தினர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்னாள் அமைச்சர் உட்பட 11 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புதுறையில் வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போது திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பட்டியலில் ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய உதவி கோட்ட பொறியாளர், இளநிலை பொறியாளர், சாலை பராமரிப்பு பிரிவின் கோட்ட கணக்காளர், கோட்ட பொறியாளர், சூப்ரெண்டிங் பொறியாளர், உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் ஆகிய பதவிகள் வகித்த அதிகாரிகளான கண்ணன், பூபாலன் சிங், பெரியசாமி, சத்தியபாமா, நிதிலன், ரஃபிக் முகமது, தீபிகா, கார்த்திக், சத்யா, சங்கர் ஆனந்த் இன்ஃபாரா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது இ120(B) கூட்டுச் சதி, 409 அரசுப் பணம் கையாடல் மற்றும் நம்பிக்கைத் துரோகம், 420 மோசடி, 468 போலி ஆவணங்கள் தயாரித்தல், 471 போலி ஆவணங்களை பயன்படுத்துதல், 109 உடந்தை உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், “கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட நான்கு முக்கிய சாலை திட்டங்களுக்காக மொத்தம் மூன்று கோடியே 23 லட்சத்து 27550 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாரணாசி, கன்னியாகுமரி சாலை மேம்பாட்டு பணிக்கு 76.62 லட்சம், மண்மங்கலம், நன்னியூர் சாலை பணிக்காக 98.80 லட்சம், நெரூர் முதல் நன்னியூர் தளவாபாளையம் சாலை பணிக்கு 26.80 லட்சம், மற்றும் கரூர் எசாநத்தம், விரியம்பட்டி சாலை அகலப்படுத்தும் பணிக்கு 1.21 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையிலும், பணிகள் முடிந்ததாக கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு அரசு பணம் வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 1.5 கோடி மதிப்பிலான பணிகள், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் மாங்காடு, ஒரத்தூர், சேர்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 25 கோடி மதிப்பிலான சாலை திட்டங்கள் தொடர்பான ஆவணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அமைச்சர் உட்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம், திருவண்ணாமலை உள்ள அவரது வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்கள் என 13 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் ஒப்பந்த கோப்புகள், நிதி பரிவர்த்தனைகள், ஆவணங்கள்,கணினி தரவுகள் மற்றும் முக்கிய நிர்வாக ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2006- 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் எ.வ.வேலு சத்துணவு துறை அமைச்சராக இருந்த போதும், 26 லட்சம் வருமானத்திற்கு மீறி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், அந்த வழக்கானது கடந்த 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் மூலம் முடித்து வைக்கப்பட்டது. மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு எ.வ.வேலு திமுக ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, வருமான வரித்துறை அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், விசாரணை மேலும் தீவிரபடுத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை நிறைவடைந்த பின்னரே கைப்பற்ற பொருட்கள் ஆவணங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முழு தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்றது முதல் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 104 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.