ஹைதராபாத்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதனால், இந்த முறை எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நாளை நடைபெறவிருக்கும் குரூப்-1 அணிகளுக்கான லீக் போட்டியில், இந்திய மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டி, மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை பலப்படுத்தும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவு செய்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்கிறது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோர் பேட்டிங்கிலும், தீப்தி சர்மா, ஸ்ரீ சரணி ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்தி வருவது அணிக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. மறுபக்கம், நிகர் சுல்தானா தலைமையிலான வங்கதேச மகளிர் அணியும், இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங்கில் சொர்னா அக்தர், நிகர் சுல்தானா, ஷர்மின் அக்தர் ஆகியோரும், பவுலிங்கில் ஷன்ஜிதா அக்தர், ரிது மோனி, மருஃபா அக்தர் உள்ளிட்டோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்திய மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 20 போட்டிகளிலும், வங்கதேச அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேசமயம், மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், மூன்று போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டிகளை காண முடியும். இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு 6.30 மணிக்கு நடைபெறும். இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி/ரேணுகா சிங், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, நந்தனி சர்மா. வங்கதேச மகளிர் அணி: திலாரா அக்தர், ஜுவைரியா ஃபெர்டஸ், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா (கேப்டன்), சோபனா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்தர், ரபேயா கான், நஹிதா அக்தர், ஷன்ஜிதா அக்தர், மருஃபா அக்தர்
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 6:51 pm
Posted By : ADMIN
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: அரையிறுதி வாய்ப்பு யாருக்கு? வாழ்வா சாவா மோதலில் இந்தியா vs வங்கதேசம்