Date : 26 June 2026, 6:46 pm
Posted By : ADMIN

திருவள்ளூர் அம்மோனியா வாயுக்கசிவு சம்பவம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக அதிகரிப்பு

திருவள்ளூர் அம்மோனியா வாயுக்கசிவு சம்பவம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக அதிகரிப்பு

சென்னை: திருவள்ளுர் மாவட்டத்தில் அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவை சேர்ந்த சுமித்ரா ஜுவாங்கா என்ற பெண் தொழிலாளி உயிரிழந்தார். இதனால், வாயுக்கசிவு சம்பவத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21 திடீரென கூலிங் பைப்பிலிருந்து அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. நிறுவனத்தின் வளாகத்திலேயே அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், வாயுக்கசிவால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டதால், உடனடியாக சென்னை மற்றும் திருவள்ளூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஒடிசாவை சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி நேற்று உயிரிழந்தார். அதே மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா ஜுவாங்கா என்ற பெண் தொழிலாளியும், சுமித்ரா ஜுவாங்கா என்ற பெண் தொழிலாளியும் இன்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 12 -ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 13 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2 பேர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனர். நேற்று ஒருவரும் இன்று 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போது அங்கு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 பேரில், 2 பேர் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பினர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 3 பேர் உயிரிழந்தனர். இன்னும் 9 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.