சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, ரூ.3.23 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 35 பேர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அத்துடன், எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலேயே, ரூ.3.23 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு; மாநில நெடுஞ்சாலை 'பணிகளை மேற்கொள்ளவும், சீரமைப்பதற்கும் ஒவ் வொரு ஆண்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியில் ஊழலும், முறைகேடும் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. மாநில நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வாரணாசி-கன்னியாகுமரி சாலைகள் தரத்தை மேம்படுத்தும் பணிகளும் மன்மங்கலம், நன்னியூர் சாலையின் தரத்தை மேம்படுத்தவும், நெரூர்-தளவா பாளையம் சாலை, கரூர் விரியம்பட்டி சாலை ஆகியவற்றை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 4 சாலைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட தொகை ரூ.4.9 கோடி ஆகும். இந்த சாலைகளில் கடந்த 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் எந்த பணியும் நடைபெறவில்லை. ஆனால் மேற்கண்ட சாலைகளுக்கான தொகையில் 77 சதவீதம் ரூ3.23 கோடி அளவுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டும் உள்ளனர். இதன் மூலம் ஒப்பந்ததாரர் நியாயமற்ற முறையில் ஆதாயமடைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படி எந்த பணியும் மேற்கொள்ளப்படாமலே 2 தவணைகளாக ரூ.3.23 கோடி செலுத்தப்பட்டதன் மூலம் பொதுப்பணத்தை மோசடியாக பயன்படுத்தி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி முதல் 10-வது குற்றவாளி வரை தங்கள் கடமையை நேர்மையற்ற முறையில் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் கடந்து உள்ள நிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, இந்த வழக்குக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் அதன் மூலம் வழக்கு விசாரணையை நியாயமான முறையில் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 6:38 pm
Posted By : ADMIN
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு - காரணம் என்ன.?