சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுவரை 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் இந்த வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற தேர்தல் விதி உள்ளது. நடந்து முடிந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இரு மாநிலங்கள்களில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக மொத்தமாக இதுவரை 55 தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து மூன்றும், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஒன்று என மொத்தம் 4 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ-வும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதவிர தமிழக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், மரிய வில்சன் ஆகியோருக்கு எதிராகவும் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரு வாக்கு வித்தியாசத்தில் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோரும் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் 13 தேர்தல் வழக்குகளும், 2011 ஆம் ஆண்டு 12 வழக்குகளும் , 2016 ஆம் ஆண்டு 23 வழக்குகளும் தாக்கல் செய்யபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகள் எண்ணிடப்பட்ட பின், தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு நீதிபதியின் ஒப்புதல் கிடைத்த பின், தேர்தல் வழக்கு விதிகளின் படி அவற்றை விசாரிப்பதற்கான தனி நீதிபதி நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 11:07 pm
Posted By : ADMIN
எம்எல்ஏக்கள் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் வழக்குகள்; விஜய், உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்தும் தாக்கல்