சட்டமன்றத்தில் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மு.க.ஸ்டாலின் துணிச்சல் மிக்க தலைவர் தான் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 23ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய முதலமைச்சர். விஜய் திமுகவை கடுமையாக சாடினார். அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியை விமர்சிக்கும் வகையில் அவர் செய்த சைகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக முதலமைச்சர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது. இந்த சூழலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் அவரது சட்டமன்றத்தில் பேசிய விதத்தை கண்டிக்கவில்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாரத பிரதமர் மோடி அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே தமிழகத்திற்கு ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை தாருங்கள் என்று கேட்கக்கூடிய வலிமையான தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நாட்டை பிளவுபடுத்தும் சி.ஐ.ஏ சட்டம், விவசாயிகளை நசுக்கும் வேளாண் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து அதனை ஒன்றிய அரசால் திரும்ப பெற வைத்த தலைவர் மு.க.ஸ்டாலின். ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஒன்றிய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி தொகுதி மறு வரை மசோதாவை குறுக்கு வழியில் நிறைவேற்ற முனைந்த போது நாடாளுமன்றதிலே அம்மசோதாவை தோற்கடித்து காட்டிய செயல்வீரர் மு.க.ஸ்டாலின். இன்றும் சிறுபான்மையின மக்களை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசால் கொண்டு வர இருக்கின்ற FCRA சட்டத்தை இந்திய அளவில் துணிந்து எதிர்கின்ற ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 1962-ல் சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967-ல் விருதுநகரில் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கலாம். ஆனாலும் கொள்கை உறுதி, இந்திய ஒற்றுமைக்கு அவர் அளிக்கும் பங்களிப்பு, எதற்கும் அஞ்சாத இந்தியாவே திரும்பி பார்க்கின்ற ஆளுமை மிக்க தலைவரை அநாகரிகமாக சட்டமன்றத்தில் பேசிய இன்றைய முதல்வரை சட்டமன்றத்தில் இருந்த ஆளும் கட்சி அல்லாத பிறகட்சிகள் தட்டிக் கேட்க தயங்கியது ஏன்? அச்சப்பட்டு விட்டார்களா? அல்லது சட்டமன்றத்தில் நடந்ததை சினிமா காட்சிகள் என்று கடந்து சென்றுவிட்டார்களா? அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இன்றைய முதல்வரின் அநாகரீக விமர்சனத்தை நேரடியாக கண்டிக்க தயங்குவது ஏன்?” என தெரிவித்துள்ளார்.
www.TamilnaduePaper.com
Call/Whatsapp: 9337501889
Date : 26 June 2026, 6:07 pm
Posted By : ADMIN
விஜயை தட்டிக் கேட்க தயங்குவது ஏன்? - கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடிய அப்பாவு!