Date : 26 June 2026, 5:59 pm
Posted By : ADMIN

"விஜய் நீங்க பேசுனது சரியல்ல ஸ்டாலினை ஏளனம் செய்யாதீங்க" சப்போர்ட்டுக்குவந்த திருமா

"விஜய் நீங்க பேசுனது சரியல்ல ஸ்டாலினை ஏளனம் செய்யாதீங்க" சப்போர்ட்டுக்குவந்த திருமா

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடும் திட்டத்தை தவெக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் திருமாவளவன், சட்டமன்றத்தில் ஸ்டாலினை விஜய் ஏளனம் செய்யும் வகையில் பேசியது சரியல்ல என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். தவெக-வின் தேர்தல் வாக்குறுதியான, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ஜூன் 22-ம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டத்துக்காக 755 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இத்திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று விஜய் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இத்திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் தற்போது 56 சதவிகித குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட 50 ஆயிரம் முதல் ஒரு இலட்ச ரூபாய் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும். மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும், முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.