பாகு:
உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியான காஸ்பியன் கடல், திடீரென வேகமாக சுருங்கி வருகிறது. இதே நிலை நீடித்தால் அவை சீக்கிரம் மறைந்தும் கூட போகும். இதனால் அந்த ஏரியில் இருக்கும் மீன்கள், அது சார்ந்து இருக்கும் விலங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பொருளாதாரத்திற்கும் கூட இது மிகப் பெரிய ஆபத்தாக இருக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மனிதர்கள் ஏற்படுத்தும் மாற்றத்தால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை மொத்தமாகவே மாறி வருகிறது. சில பல இடங்களில் இயற்கை அழிந்தும் கூட வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நம்மால் இந்தச் சிக்கலைப் பார்க்க முடிகிறது. அப்படியொரு சிக்கல் தான் உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரியான காஸ்பியன் கடலுக்கு ஏற்பட்டுள்ளது.
காஸ்பியன் கடல்
மேற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்தில் ரஷ்யா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு நடுவில் இந்த ஏரி அமைந்துள்ளது. பெயரிலேயே இது கடல் என்ற சொல்லைக் கொண்டிருந்தாலும் உண்மையில் இந்த காஸ்பியன் கடல் என்பது உப்பு நீர் ஏரியாகும். இது உலகின் மிகப் பெரிய ஏரியாகும்.
உலகின் மிகப் பெரிய ஏரி மாயம்
இந்த ஏரி தான் இப்போது ஆபத்தான வேகத்தில் சுருங்கி வருகிறது. இதனால் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து, துறைமுகச் செயல்பாடுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் என எல்லாமே பாதிக்கப்படுவதாக அஜர்பைஜான் கவலை தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நீர் மட்டம் 0.93 மீட்டர் குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 1.5 மீட்டரும், கடந்த 30 ஆண்டுகளில் 2.5 மீட்டரும் நீர் மட்டம் குறைந்துள்ளது.
இப்போது ஆண்டுக்கு 20 முதல் 30 சென்டிமீட்டர் வரை நீர் மட்டம் குறைந்து வருவதாக மதிப்பிடப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஏரி மிக விரைவில் மாயமாகிவிடும். இதனால் நீண்டகாலச் சூழலியல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் கூட ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. காஸ்பியன் கடலானது எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது..
வாழ்வாதாரம் பாதிப்பு
மீன்பிடி, வர்த்தகம் மற்றும் விவசாயத்திற்காக 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ஏரியை நம்பி இருக்கிறார்கள். குறிப்பாக அஜர்பைஜான் கரையோரத்தில் 40 லட்சம் பேர் இதைச் சார்ந்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த ஏரியின் நீர் மட்டம் குறைவதை அஜர்பைஜான் கவலையுடன் உற்று நோக்கி வருகிறது.
நிலைமை மோசம்
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 880,000 டன்களாக இருந்த எண்ணெய் சரக்குப் போக்குவரத்து, இந்தாண்டு அதே காலகட்டத்தில் 810,000 டன்களாகக் குறைந்துள்ளது. நீர் நிலை சுருங்குவதே இதற்குப் பிரதானக் காரணமாகும். அதேபோல உலகின் மிகப் பழமையான மீன் இனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்டர்ஜன் மீன்களும் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறது. அழிந்துவரும் மற்றொரு இனமான காஸ்பியன் சீல்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அஜர்பைஜான் அதிகாரி ஹாஜியேவ் கூறுகையில், "கடல் மட்டம் 5 மீட்டர் குறைந்தால், சீல்கள் தங்கள் இனப்பெருக்கத் தளங்களில் 81% வரை இழக்கும். 10 மீட்டர் குறைந்தால் இனப்பெருக்கம் செய்யும் எல்லா இடங்களையும் இழந்து சீல்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்" என்றார். இந்தளவுக்கு ஆபத்தான நிலைக்கு காஸ்பியன் ஏரி தள்ளப்பட்டுள்ளது.
காஸ்பியன் கடல் ஏன் சுருங்குகிறது?
இந்த நெருக்கடிக்குக் காலநிலை மாற்றம் காரணம் எனச் சொல்கிறது ரஷ்யா.. அதேநேரம் காஸ்பியனின் 80% நீரை கொடுக்கும் வோல்கா நதியில் ஏகப்பட்ட அணைகளைக் கட்டி ரஷ்யா பிரச்சனையை மோசமாக்குகிறது என்று அஜர்பைஜான் குற்றம் சாட்டுகிறது.
புதைபடிவ எரிபொருளை எடுப்பது நிலைமை மேலும் மோசமாக்குகிறது. புதைபடிவ எரிபொருள் இந்தப் பிராந்தியத்தின் முக்கியமான பொருளாதார மையமாக இருந்தாலும் கூட இதனால் ஏரியின் சூழ் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் கிரீன் ஹவுஸ் கேஸ்கள் அதிகமாக அப்பகுதியில் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் வெப்பமானதாக மாறி, நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துகிறது.