வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தேனி, ஆக. 4–


வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்காக கடந்த 14 நாட்களாக 800 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.


கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது. நீர்மின் நிலையம் வழியாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் இன்று அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெள்ள அபாய எச்சரிக்கை


அணைக்கு வினாடிக்கு 1594 கன அடி தண்ணீர் வருகிறது.69 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது. இந்த முறை வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு பின்னர் வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து வருகின்றனர்.


தற்போது தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு 1053 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1862 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 134.15 அடியாக உள்ளது. நீர் இருப்பு 5667 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மற்ற அணைகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%