ஸ்தம்பித்த ரஷ்யா.. பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு.. பல கிமீ காத்திருக்கும் வாகனங்கள்

ஸ்தம்பித்த ரஷ்யா.. பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு..  பல கிமீ காத்திருக்கும் வாகனங்கள்

மாஸ்கோ:


ரஷ்யா தற்போது ஒரு மிகப்பெரிய எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஷ்ய ஊடகங்களில் வரும் செய்திகளின் படி, பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் நிலையங்களில் கிடைப்பதில்லை என்றும், எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் நிற்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.


ரஷ்யாவில் எரிபொருள் அதிக அளவில் உள்ளது. அங்குள்ள எரிபொருளை தனக்கு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ரஷ்யா வழங்கி வந்தது. இப்போதும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக, தன்னாட்சி பகுதியான கிரிமியா பகுதியில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


குறிப்பாக சொல்வது என்றால். ப்ரிமோர்ஸ்கி (Primorsky) மற்றும் காபரோவ்ஸ்க் (Khabarovsk) கிரைஸ் பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளதாம். அங்கு எரிபொருள் நிலையங்களில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் இருந்து கேன்களை எடுத்துச் சென்று பெட்ரோல் வாங்க நிற்கிறார்கள்.. இப்படியாக வீடியோக்கள் உள்ளது.

 

ரஷ்யாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றுலாப் பயணிகளும் சிக்கித் தவிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட உக்ரைனின் தன்னாட்சி பகுதியான கிரிமியா (Crimea) மற்றும் ஓஆர்டிஎல்ஓ (ORDLO) முதல் விளாடிவோஸ்டாக் (Vladivostok) வரை இந்த நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கிரிமியாவின் ரஷ்ய நிர்வாகத் தலைவர் அக்ஸ்யோனோவ், இந்த நிலைமை குறைந்தது ஒரு மாதம் நீடிக்கும் என்று கூறினார்.

 

இதனால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள், பெட்ரோல் எங்கே? என்று கேட்டு அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதற்கு விளக்கம் அளித்த ரஷ்யாவின் அதிகாரிகள், மாற்று எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டது என்றும், பெரிய நிறுவனங்கள் அவசரகாலத் தேவைக்காக எரிபொருளை சேமித்து வைப்பதாகவும் கூறினார்கள். பெட்ரோல், டீசல் விநியோகத்தில் ஏற்பட்ட ஏகபோகம் மற்றும் குளறுபடிகளால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல்களால், சில எரிபொருள் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் பகுதியளவு அழிக்கப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் டீசல் விநியோகச் சங்கிலியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே தட்டுப்பாட்டிற்குக் காரணம் என கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏனெனில் கிரிமியாவை பொறுத்தவரை பெட்ரோல் பெரும்பாலும் சாலை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.


டோக்கன் முறையில் விற்பனை

இதற்கிடையில், ஜபாய்கல்ஸ்கி கிராய் பகுதியில், டோக்கன்முறையில் எரிபொருள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில், AI-95 ரக பெட்ரோலின் விலை ஒரு டன்னுக்கு 81,337 ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ரஷ்யாவின் முழு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் சரக்கு போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, சரக்கு ஏற்றுமதி அளவு குறைந்து, பணவீக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. இதனால் ரஷ்யாவின் பல பகுதிகள் முழுமையாக ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பாவில் உள்ள ஊடகங்கள் கூறுகின்றன.


பெட்ரோல் விலை எவ்வளவு

ஐரோப்பிய ஊடகங்களின் செய்திகளின் படி, ரஷ்யாவில் பெட்ரோல் விலைகள் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன. ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு சந்தை ஸ்திரத்தன்மையை இழந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கமாடிட்டி அண்ட் ரா மெட்டீரியல்ஸ் எக்ஸ்சேஞ்ச் அறிக்கையின்படி, ஒரு டன் AI-92 பெட்ரோல் 71.5 ஆயிரம் ரூபாயாகவும், AI-95 ரக பெட்ரோல் 80.43 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இதன் விலை முறையே 1.33% மற்றும் 2.2% அதிகரித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்த விலை உயர்வு 38% மற்றும் 49% ஆக இருக்கிறதாம்.


 விலை உயர்வை கட்டுப்படுத்த, ரஷ்ய அரசாங்கம் ஆகஸ்ட் மாத இறுதி வரை பெட்ரோல் ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதித்திருந்தது. ஆனால் அதை செப்டம்பர் இறுதி வரை நீட்டித்தது. இருப்பினும், ஏற்றுமதி அளவுகள் மிகக் குறைவு என்பதால் இது சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள்.


உக்ரைன் பார்த்த வேலை

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், ரோஸ்நெஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான நொவோகுய்பிஷெவ்ஸ்க் மற்றும் சரடோவ் சுத்திகரிப்பு நிலையங்கள், லுகோயில் நிறுவனத்தின் வோல்கோகிராட் சுத்திகரிப்பு நிலையம் (தெற்கு ரஷ்யாவில் மிகப்பெரியது) என மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் உக்ரைன் தாக்குதல் காரணமாக மூடப்பட்டிருக்கின்றன. இந்த ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 29.8 மில்லியன் டன்கள் ஆகும். இது ரஷ்யாவின் மொத்த சுத்திகரிப்பு அளவில் சுமார் 11% என்று சொல்லப்படுகிறது. மேலும், உக்ரைன் தாக்குதலால், ரோஸ்நெஃப்ட்டின் மிகப்பெரிய ஆலையான ரியாசான் ஆயில் ரிஃபைனரி அதன் உற்பத்தித் திறனில் பாதியை இழந்துள்ளது. சிஸ்ரான், ஸ்லாவியன்ஸ்க் மற்றும் அஃபிப்ஸ்கி சுத்திகரிப்பு நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.


ரஷ்யாவில் 75 சதவீதம் வரி

எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை ஆய்வாளரான மிகைல் க்ரூடிகின் வெளியிட்ட தகவலில், உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால் மட்டும் விலை உயரவில்லை என்றும், பிற காரணங்களும் விலை உயர்வுக்குக் காரணம் என்றால், "ரஷ்யாவில் பெட்ரோல் விலையில் 75 சதவீதம் வரிகள் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%