Wednesday, 01 July 2026, 05:11 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 21:44:45 | Reporter: Admin
ஹைதராபாத்: அமெரிக்க அணிக்கு எதிரான ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து லீக் போட்டியில், துருக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 'குரூப் டி' பிரிவின் கடைசி லீக் போட்டியில், அமெரிக்கா மற்றும் துருக்கி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்து அசத்தினர். அந்தவகையில், ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்திலேயே அமெரிக்காவின் ஆஸ்டன் டிரஸ்டி முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். எனினும், துருக்கி அணியின் நட்சத்திர வீரர் அர்டா குலர் 10ஆவது நிமிடத்திலும், பாரிஸ் யில்மாஸ் 31ஆவது நிமிடத்திலும் என அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்து அசத்தினர். இதன் மூலம் துருக்கி அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில், 49ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் செபாஸ்டியன் பெர்ஹால்டர் கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் டிஃபென்ஸில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக, இந்த ஆட்டம் சமனில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+8-ஆவது நிமிடத்தில் துருக்கி அணியின் கானான் அய்ஹான் ஒரு அதிரடி கோலடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் துருக்கி அணி 3-2 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. அதேசமயம், மறுபக்கம் இறுதிவரை போராடிய அமெரிக்க அணியால் அதற்குப் பிறகு எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியவில்லை. இறுதியில், ஆட்ட நேர முடிவில் துருக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி, இந்த உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. அதேசமயம், 'குரூப் டி' பிரிவில் நடைபெற்ற மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பராகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த தீவிர முயற்சிகளை இருதரப்பு டிஃபென்டர்ஸும், கோல்கீப்பர்களும் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக இப்போட்டி கோல்கள் ஏதுமின்றி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியானது மொத்தம் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.