Monday, 29 June 2026, 06:06 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 21:43:46 | Reporter: Admin
சென்னை: பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பாதிப்புகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கூறும் படமாக ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress) திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம், எம்.ஐ.ஜி ப்ரொடக்ஷன்ஸ் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B .ஷிண்டே கதை எழுதி, தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை வெளிக்கொணர போராடும் வகையில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படேவின் கதாபாத்திரங்கள் வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது. அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் நச்சுப் பொருட்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை படம் உருக்கமாக எடுத்துரைக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் குறித்து நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறும்போது, “இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் கருப்பொருள் தான். பூச்சிக்கொல்லி விவசாயம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சனையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. மிகப்பெரிய அமைப்புகளுக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான பயணத்தை என் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மிக முக்கியமான ஒரு விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்” என்றார். நடிகை காஜல் அகர்வால் கூறுகையில், “தி இந்தியா ஸ்டோரி ஒரு வலுவான சமூகச் செய்தியை கொண்ட திரைப்படம். ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும், கவலைகளையும் இது பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பார்வைக்கு பெரும்பாலும் வராத ஒரு உண்மையை டீசர் வெளிப்படுத்துகிறது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் அவை எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் இப்படம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.