Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 21:39:46 | Reporter: Admin
ஹைதராபாத்: அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ரோனக் சௌகான், கிடாம்பி ஸ்ரீகாந்த், தன்வி சர்மா மற்றும் தேவிகா சிஹாக் ஆகியோர் அதிரடி வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் இளம் வீரர் ரோனக் சௌகான், உலகின் 6ஆம் நிலை வீரரான சீன தைபேயின் சோவ் தியென் செனை எதிர்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே, ரோனக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை உயர்த்தினார். இப்போட்டியின் முதல் செட்டை ரோனக் சௌகான் 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், கடும் போராட்டத்திற்குப் பின் 26-24 என்ற கணக்கில் அதையும் தன்வசமாக்கினார். இதன் மூலம் 21-17, 26-24 என்ற நேர் செட் கணக்கில் சோவ் தியெனை வீழ்த்திய ரோனக் சௌகான், இத்தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், முன்னாள் உலக நம்பர் 1 வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் லீ ஜி ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த், 21-14, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மலேசிய வீரரை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம், நடப்பு அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு ஸ்ரீகாந்த் முன்னேறி அசத்தியுள்ளார். அதே சமயம், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி சர்மா, சீன தைபேயின் துங் சியூ-டாங்கை எதிர்கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த தன்வி சர்மா, 21-12, 21-19 என்ற கணக்கில் நேர் செட்களில் சீன தைபே வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், தாய்லாந்தின் டோன்ரக் சேஹெங்கை எதிர்கொண்டார். இருவருமே புள்ளிகளைக் கைப்பற்றக் கடுமையாகப் போட்டியிட்ட நிலையில், ஆட்டத்தின் இறுதியில் தேவிகா 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம், காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.