Tuesday, 30 June 2026, 09:43 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆப்பிள்; 20 முதல் 42 சதவீதம் வரை உயரும் மேக்புக், ஐபேட் விலை

Published On: 2026-06-26 21:31:47 | Reporter: Admin

News Image

புது டெல்லி: உலக அளவில் தன்னுடைய முக்கிய தயாரிப்புகளான ஐபேட் மற்றும் மேக்புக் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஆப்பிள் தயாரிப்பு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உலக புகழ்பெற்ற மின்னணுச் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ஆப்பிள் (Apple), அதன் முக்கிய தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 20 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை இவற்றின் விலை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவில் ஏஐ பயன்பாடு பன்மடங்காக உயர்த்திருப்பதால், அதிவேக செயல்திறன் மிக்க சிப்-களின் தேவை அதிகரித்துள்ளது. உற்பத்தியைவிட சிப்களின் தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆகையால், அதன் விலை சந்தையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால், ஐபேட், மேக்புக் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு செலவு கூடியுள்ளது. ஆகையால், அவற்றின் விலையை உயர்த்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்து உள்ளது. நிறுவனத்தின் விலை உயர்வு நடவடிக்கையால் மேக்புக் நியோ (MacBook Neo), மேக்புக் ஏர் (MacBook Air M5), மேக்புக் ப்ரோ (MacBook Pro M5), மேக்புக் ப்ரோ எம்5 மேக்ஸ் (MacBook M5 Max), மேக் மினி (Mac Mini), மேக் ஸ்டுடியோ (Mac Studio) , ஐபேட் (iPad), ஐபேட் ஏர் (iPad Air), ஐபேட் ப்ரோ(iPad Pro), ஆப்பிள் டிவி 4 கே (Apple TV 4K), ஹோம் பாட் (HomePod), ஹோம் பாட் மினி (HomePod Mini) மற்றும் விஷன் ப்ரோ (Vision Pro) ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'நுகர்வோர் மின்னணுத் துறை முன்னெப்போதும் இல்லாத ஒரு சவாலை எதிர்கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்கள் வேகமாக விரிவடைந்து வருவதால், நினைவகம் மற்றும் சேமிப்பகத்திற்கான தேவை அசாதாரணமான எழுச்சியை கண்டுள்ளது. இதனால், அதன் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு உதிரிபாகத்தின் விலை இவ்வளவு அதிகமாகவும், இவ்வளவு விரைவாகவும் உயர்ந்ததை இதற்கு முன் கண்டதில்லை. இதுவரை அரங்கேறிய விலை உயர்வில் இருந்து எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். ஆனால், இனி அது இயலாது. ஐபேட் மற்றும் மேக்புக் உட்பட சில தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம். இது ஒரு விரும்பத்தக்க செய்தி அல்ல என்பதை நாங்கள் அறிவோம். ஆகையால், இந்த விவகாரத்தில் தீர்வை காண அயராது உழைத்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7