Wednesday, 01 July 2026, 09:04 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 20:47:51 | Reporter: Admin
திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மீட்கப்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அமோனியா கசிந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து 83 தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்தனர். இவர்களில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்த நிலையில், தனியார் மற்றும் ஸ்டான்லி, ராஜீவ்காந்தி என 4 மருத்துவமனைகளில் 66 வட மாநிலத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய மீட்கப்பட்ட தொழிலாளர்கள் பெரியபாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களில் ஒடிசாவை சேர்ந்த 59 தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். 32 பெண்கள், 27 ஆண்கள் என 59 தொழிலாளர்கள் 2 பேருந்துகளில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா மாநில அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு காலை 10 மணிக்கு புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். எஞ்சிய பிற மாநில தொழிலாளர்கள் அவர்களது மாநில அதிகாரிகளுடன் ஆலோசித்து அடுத்தடுத்து அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். எஞ்சிய தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த பிரீத்தி தேவி என்ற தொழிலாளர் உயிரிழந்தார். இதன்மூலம், பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.