Monday, 29 June 2026, 06:06 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

டிஜி20 லீக்: கௌரவ், நிதிஷ் ரெட்டி அதிரடி பார்ட்னர்ஷிப்; வாரங்கலை வீழ்த்தி நல்கொண்டா அபார வெற்றி

Published On: 2026-06-26 23:21:36 | Reporter: Admin

News Image

ஹைதராபாத்: வாரங்கல் வாரியர்ஸ் அணிக்கு எதிரான டிஜி20 லீக் ஆட்டத்தில் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் நடத்தும் முதலாவது சீசன் 'டிஜி20' (TG20) தெலங்கானா டி20 பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் மற்றும் வாரங்கல் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வாரங்கல் வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்துக் களமிறங்கிய நல்கொண்டா அணியின் தொடக்க வீரர் பிரனவ் சூர்யதேவரா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கௌரவ் ரெட்டி மற்றும் நிதிஷ் ரெட்டி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தங்களது அரைசதங்களையும் பதிவு செய்து மிரட்டினர். இதில் இருவரும் இணைந்து 142 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 80 ரன்கள் எடுத்த நிலையில் கௌரவ் ரெட்டி விக்கெட்டை இழக்க, 81 ரன்களில் நிதிஷ் ரெட்டியும் ஆட்டமிழந்தார். இதையடுத்துக் களமிறங்கிய ராகுல் புத்தி 31 ரன்களையும், அர்ஃபஸ் அஹ்மத் 33 ரன்களையும் சேர்த்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தனர். இதன் மூலம் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைக் குவித்தது. வாரங்கல் வாரியர்ஸ் அணி தரப்பில் அப்துல் மாலிக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கிப் பின்தொடர்ந்த வாரங்கல் வாரியர்ஸ் அணியில், தொடக்க வீரர்களான ஹர்ஷித் சௌத்ரி 10 ரன்களுக்கும், ரிஷிகேத் சிசோடியா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் அமன் ராவ் மற்றும் முருகன் அபிஷேக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்தியதுடன், சீரான வேகத்தில் ரன்களையும் உயர்த்தியது. பின்னர் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமன் ராவ் ஆட்டமிழக்க, 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 44 ரன்களில் முருகன் அபிஷேக்கும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சோபிக்கத் தவற, வாரங்கல் வாரியர்ஸ் அணி 14 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்கொண்டா அணி தரப்பில் சரனு நிஷாந்த் மற்றும் வருண் கௌட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் அனுராக் நல்கொண்டா நைட்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வாரங்கல் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அதிரடியாக அரைசதம் விளாசி அசத்திய நல்கொண்டா அணியின் நிதிஷ் ரெட்டி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7