Wednesday, 01 July 2026, 09:02 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

IND vs IRE: "வைபவ் சூர்யவன்ஷி கொண்டாட்டத்தை கெடுப்போம்".. அயர்லாந்து கேப்டன் டக்கர் சவால்

Published On: 2026-06-26 20:29:53 | Reporter: Admin

News Image

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது அறிமுகக் கொண்டாட்டத்தைக் கெடுக்கத் தயாராக உள்ளதாக அயர்லாந்து கேப்டன் லார்கன் டக்கர் சவால் விடுத்துள்ளார். பெல்ஃபாஸ்ட் நகரில் தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட இந்தியா - அயர்லாந்து டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. இது குறித்துப் பேசிய அயர்லாந்து கேப்டன் லார்கன் டக்கர், "இந்த நவீன தொழில்முறை கிரிக்கெட் காலத்தில், 15 வயது சிறுவன் சர்வதேச அணியில் விளையாடுவது என்பது மிகவும் அசாத்தியமானது. அவர் ஒரு அசாதாரணமான திறமையாளர். இந்த வாரத்தில் அவரது அறிமுக ஆட்டத்தைக் காண நாங்களும் ஆவலோடு உள்ளோம். அது அவருக்கு ஒரு பெரிய தருணமாக இருக்கும், ஆனால் அவரது அந்த கொண்டாட்டத்தை கெடுத்து வெற்றியைப் பறிக்க நாங்கள் ஆசைப்படுகிறோம்" என்று கூறினார். மேலும், "அவர் மிகவும் திறமையான வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 776 ரன்கள் குவித்து தொடரின் சிறந்த வீரர் விருதையும் வென்று அசத்தினார். சமீபத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இதனால் அவரைப் பற்றி நாங்கள் பல ஆராய்ச்சிகளைச் செய்துள்ளோம்" என்றும் டக்கர் தெரிவித்தார். ஜோஷ் லிட்டில், மார்க் அடேர், பால் ஸ்டிர்லிங் போன்ற முக்கிய மூத்த வீரர்கள் இல்லாமல் அயர்லாந்து அணி இத்தொடரில் களம் இறங்குகிறது. இருப்பினும், தங்களது சொந்த மண்ணின் சாதகமான சூழல் தங்களுக்கு உதவும் என்று டக்கர் கூறினார். "இந்திய அணி உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றாகும். ஆனால், அனைத்து அழுத்தமும் அவர்கள் மீதுதான் உள்ளது. இப்போட்டி நடைபெறும் மைதானம் அவர்களுக்குப் பழகியதை விட மெதுவாக இருக்கும். இது எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம். இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்து எங்களது திறமையை நிரூபிக்கத் தயாராக உள்ளோம்" என்று லார்கன் டக்கர் கூறினார்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7