Monday, 29 June 2026, 06:05 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Life Style / Article

Life Style

சாலை அமைக்காமலேயே கோடிக்கணக்கில் கையாடல்? எ.வ.வேலு மீது வழக்கு பதிவு..!

Published On: 2026-06-26 23:38:32 | Reporter: Admin

News Image

எவ வேலு வீட்டின் முன் வந்த எவ வேலுவின் வழக்கறிஞர், தான் எவ வேலுவை சந்திக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கூறினார். அதற்கு, தற்போது வீட்டில் சோதனை செய்து கொண்டிருக்கிறோம், அது முடிந்த பின்பு வாருங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கூறியதோடு, வழக்கறிஞரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தார். எ.வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு - பின்னணி..! திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, ​நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து இந்த அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR ) பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 4 பக்கங்கள் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கூட்டுச் சதியால், சாலை பணிகள் ஏதும் மேற்கொள்ளாமலேயே பொதுப் பணத்தை கையாடல் செய்துள்ளனர் என மனுவில் குறிப்பிடப்பட்டது. திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக (TPR-007) 'சங்கரானந்த் இன்ஃப்ரா' (Sankaranand Infra) என்ற நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் வழங்கப்பட்டது. இதில் எந்தவொரு சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 ஆம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் 3.23 கோடி ரூபாய் நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததும், குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், காவல்துறையின் பாதுகாப்போடு இரவோடு இரவாக அவசர அவசரமாக சாலை அமைக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கூட்டுச் சேர்ந்து முயன்றதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, அரசு (பொதுத் துறை) கடந்த 23 ஆம் தேதியன்று விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் கடந்த 24 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. கூட்டுச் சதி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு..! கடந்த திமுக ஆட்சியில் பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் தற்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும், திமுக எம்எல்ஏக்களின் சட்டசபை கொறடாவாகவும் இருந்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவா வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை நீதிமன்றத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு எ.வ.வேலு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது அரசு ஒப்பந்தங்கள் தொடர்பாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7