Monday, 29 June 2026, 06:05 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

முதல் டி20: இந்தியாவுக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அயர்லாந்து

Published On: 2026-06-26 23:20:36 | Reporter: Admin

News Image

ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, அயர்லாந்தை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்குத் டிம் டெக்டர் - ராஸ் அடேர் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ராஸ் அடேர் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ஹாரி டெக்டர் ரன்கள் ஏதுமின்றியும், டிம் டெக்டர் 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய பெஞ்சமினும் 15 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த கேப்டன் லோர்கன் டக்கர் மற்றும் கரேத் டெலானி இணை அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தியது. அபாரமாக விளையாடி வந்த லோர்கன் டக்கர் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். இவர்கள் இருவரும் இணைந்து 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், லோர்கன் டக்கர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜ் டாக்ரெல்லும் தனது பங்கிற்கு 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய கரேத் டெலானி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 49 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதன்மூலம் வெறும் ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டு பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதன் காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7