Wednesday, 01 July 2026, 10:21 AM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

கடவுளின் தேசத்தை நடுநடுங்க செய்யும் போதை கலாச்சாரம்: தோண்ட தோண்ட கிளம்பும் பூதம்

Published On: 2026-06-26 20:18:54 | Reporter: Admin

News Image

திருவனந்தபுரம்: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. எந்தவொரு மாநிலமும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்கிற போது, கடவுளின் தேசமான கேரளாவை மட்டும் இந்த போதை எனும் பிசாசு பிடிக்காமலா இருந்துவிட போகிறது? கேரளாவில் மதுபானத்திற்கு பிறகு, நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்த ஒரு போதைப்பொருளாக கஞ்சா மட்டுமே இருந்து வந்தது. கஞ்சா போதை ஆங்காங்கே சில குற்றச்செயல்களுக்கும் வழிவகுத்தது. ஆனால், இப்போது நிலைமை கைமீறி போய்விட்டது. கஞ்சா பழைய போதைப்பொருளாக மாறி, தற்போது MDMA (எம்டிஎம்ஏ) எனும் போதைப்பொருள் கேரளாவை ஆக்கிரமித்துள்ளதாக கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள். கேரளாவில் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை ஒப்பிட்டு பார்த்தால் ஆபத்து புரியவரும். கேரளாவில் 2017-இல் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கை 9,244. இதுவே 2018 இல் 9,000, 2019இல் 9,000, 2020இல் 5,000, 2021இல் 5,695, 2022இல் 26,918, 2023இல் 30,715, 2024இல் 27,701 வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் கேரளாவில் 85,000 + வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறும் போது, அங்கு போதைப்பொருட்களின் கோரத்தாண்டவத்தை நம்மால் உணர முடிகிறது. 'மெத்தைல்-டை-ஆக்சி- மெத்தஃபட்டமைன்' என்பதே இதன் வேதிப்பெயர். ஆனால், இதற்கு போதை இளைஞர்கள் மத்தியில் 4.20 PM என்ற பிரபலமான பெயர் உள்ளது. 4.20 PM பார்ட்டி என்ற பெயரில் கேரளா முழுவதும் நடைபெறும் கேளிக்கை நிகழ்வுகளில் இந்த எம்எம்டிஏ போதைப்பொருளைதான் இளைஞர்கள் பிரதானமாக எடுத்துக் கொள்வதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த 4.20 PM பார்ட்டியில் நடக்கும் சம்பவம் சமீபத்தில்தான் காவல்துறைக்கு தெரியவந்திருக்கிறது. எனவே, எம்எம்டிஏ-வுக்கு எதிரான வேட்டை கேரளாவில் வேகமெடுத்துள்ளது. ஆனால், என்னதான் காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கினாலும், உளவுத்துறை வேகமாக செயல்பட்டாலும் இந்த போதைப்பொருளால் ஏற்பட்டுள்ள பிரச்னை மிகப்பெரியது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது பார்ட்டிகளில் மட்டுமல்லாமல், 4.20 என்ற சங்கேத வார்த்தை ஆன்லைன்களிலும் புழங்கி வருவது அதிகரித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான விடுதிகள், ரிசார்ட்டுகள், குறுகிய கால வாடகைக்கான வீடுகள்தான் எம்எம்டிஏ போதைப்பொருளின் பிரதான புகலிடமாக உள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது. எம்எம்டிஏ போதைப்பொருள் மிகுந்த உற்சாகத்தை தருகிறது என திட்டமிட்டு பரப்பப்படும் தகவலை நம்பி, மாணவர்கள் இந்த எம்எம்டிஏ அரக்கனின் பிடியில் சிக்கி விட்டார்களோ என்ற அச்சமும் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி, விடுதிகள் மட்டுமின்றி, ஐடி நிறுவனங்களின் சுற்றுப்புறங்களிலும் எம்எம்டிஏ புழக்கம் இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். இந்த எம்எம்டிஏ போதைப்பொருளை கேரளாவுக்குள் கொண்டு வருவதில் கடல்வழி போக்குவரத்து பெரும் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டு கப்பல்கள் மூலம் அதிக அளவில் எம்எம்டிஏ கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதிலும், தமிழ்நடு, கர்நாடகா, ஆந்திராவை கேரளாவுடன் இணைக்கும் மலபார் கடல் வழித்தடம் இந்த வகை போதைப்பொருள் கடத்தலின் மையமாக திகழ்கிறது. இதனைக் கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை கேரள போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கேரள காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசும் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. "10,20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இந்த 4.20 எனப்படும் எம்எம்டிஏ போதைப்பொருள் கலாச்சாரம் இருந்துள்ளது. இப்போது இது கேரளாவுக்கும் பரவியிருக்கிறது. கேரளாவை பொறுத்தவரை, தென் மாவட்டங்களில் உள்ள பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இந்த போதைப்பொருளின் புழக்கம் அதிக அளவில் உள்ளது. இது மாத்திரை, திரவம், பவுடர் என பல பரிமாணங்களில் சுற்றி வருவதால் இதனை கண்டறிவது மிகவும் தாமதமான விஷயம்" என்கிறார். இதுதொடர்பாக கலால் துறை உயரதிகாரி கூறுகையில், "எம்எம்டிஏ போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, அவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள். உதாரணமாக, ஆடம், பீன்ஸ், பிஸ்கட், பீஸ், எக்ஸ், கோ, ஹஹ், லவ்வர்ஸ் ஸ்பீட், கிரிஸ்டல், கிளாஸ் ப்ளூ, ஐஸ் என பலவித பெயர்களில் கள்ளச்சந்தைகளில் அழைக்கப்படுகிறது. எனவே உளவுத்துறையால் கூட இந்த எம்எம்டிஏ கடத்தலையும், விற்பனையையும் டார்கெட் செய்ய முடிவதில்லை. 10 கிராம் எம்எம்டிஏவின் விலை ரூ.3000 என்ற ரீதியில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார். இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், "எம்எம்டிஏ மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. இதை சில வருடங்கள் பயன்படுத்தினாலே சிறுநீரக பாதிப்பு, பதற்றம், மன அழுத்தம், வன்முறை எண்ணங்கள், தற்கொலை எண்ணங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்" எச்சரிக்கின்றனர். தற்போது ஆன்லைனிலும் எம்எம்டிஏ புழக்கம் அதிகரித்திருப்பதும், கிரிப்டோகரன்சி பரிமாற்றம் மூலம் விற்பனை நடைபெறுவதும் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இருந்தபோதிலும், இந்த அனைத்து சவால்களையும் தகர்க்கும் வகையில் கேரள போலீசார் அண்டை மாநில காவல்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சைபர் க்ரைம் பிரிவு ஆகியவற்றுடன் சேர்ந்து எம்எம்டிஏ போதைப்பொருளுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கையே அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் கேரளாவை ஆட்டிப்படைக்கும் எம்எம்டிஏ போதைப்பொருள் அரக்கன் விரைவில் வீழ்த்தப்படுவான் என நம்பலாம்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7