Monday, 29 June 2026, 06:05 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:19:36 | Reporter: Admin
ஹைதராபாத்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7,000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் என்ற வரலாற்றுச் சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே மற்றும் கேப்டன் டாம் லேதம் இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர். இப்போட்டியில் இருவரும் தங்களின் சதங்களைப் பதிவு செய்தது மட்டுமின்றி, 150 ரன்களையும் கடந்து அசத்தினர். அதன்பின், இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 317 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், டாம் லேதம் 151 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 157 ரன்களில் டெவான் கான்வேவும் ஆட்டமிழக்க, அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து தடுமாறினர். இதன் காரணமாக, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியின் மூலம் பென் ஸ்டோக்ஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த வகையில், இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 250ஆவது விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7,000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுதவிர, உலக அளவில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸுக்குப் பிறகு இத்தகைய அரிய சாதனையைச் செய்யும் இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காகக் கடந்த 2013-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள், 37 அரைசதங்கள் உட்பட 7,228 ரன்களையும், பந்துவீச்சில் 250 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தொடர்ந்து அசத்தி வரும் பென் ஸ்டோக்ஸ், இந்த சாதனை மூலம் தற்கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.