Monday, 29 June 2026, 06:05 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:18:36 | Reporter: Admin
சென்னை: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார். மேலும், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் தோல்வியை தழுவினார்கள். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பெரியகருப்பன், பொன்முடி, உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றிருந்த தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியான திருச்சி கிழக்கில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் அதிமுகவை சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தனது பதிவை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதிவை ராஜினாமா செய்தார். இதன் மூலம் தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆறு இடங்களில் காலியாக உள்ளன. இதற்கான இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த மே மாதம் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான அன்பின் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சியில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த ஜூன் 22-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பதிலுரையின் பொழுது, 'அப்பாவை காணவில்லை' என்ற குட்டி கதையை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பேரவையில் பேசியிருந்தார். இந்த குட்டி கதை மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் விமர்சித்தது திமுகவினரிடையே பெரும் கோபத்தை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற திமுக கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதல்வரின் விமர்சனத்திற்கு பதில் அளித்து பேசிய திமுகவின் முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, "சட்டப்பேரவையில் அப்பாவை காணவில்லை என்று குட்டிக்கதை முதல்வர் சொல்கிறார். சட்டப்பேரவைக்கு ஸ்டாலின் சீக்கிரமாக வருவார். சட்டப்பேரவைக்கு ஸ்டாலின் மீண்டும் வந்து பொறுப்பேற்ப்பது உறுதி" என்று தெரிவித்தார். இதன் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட போகிறார் என்ற அனுமானம் மேலோங்கி இருந்தது. இந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்று தெரிவித்தார்.