Monday, 29 June 2026, 06:05 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 23:17:36 | Reporter: Admin
ஈரோடு: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறவில்லை என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வனத்துறை சார்பில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்று, காட்டு யானை தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கியதோடு, வனத்துறை சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மற்றும் அவர் தொடர்புள்ள இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே வருமான வரித்துறையினர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதன் நீட்சியாக தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்துள்ளது. பவானிசாகர் பழங்குடியினர் கலாச்சார மையத்தை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம் என நீங்கள் சொல்ல வேண்டாம். அதிமுக ஆட்சிக்குப் பிறகு பணிகள் நிறுத்தப்பட்டது என்பதுதான் சரி. தற்போது அதை மீண்டும் செயல்படுத்த நிதி கேட்கப்பட்டுள்ளது" என்றார். யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைவதை தடுக்க கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல ரயில்வே தண்டவாளங்கள் மூலம் தடுப்புகள் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு "கர்நாடக மாநிலத்தை விட தமிழகத்தில் யானைகள் அதிகமாக உள்ளது. அதற்கு தகுந்தார் போல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "60 ஆண்டு காலத்துக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிதி நிலைமை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி உள்ளது என்பதை வெள்ளை அறிக்கை காட்டுகிறது. போதைப்பொருள் குறித்து சட்டமன்றத்தில் ஒரு சிலர் பேசினார்கள். போதைப் பொருள் கடத்தலில் 2000 கோடி ரூபாய் அளவுக்கு போதைப் பொருள் கடத்தலை மாபியா கும்பல் செய்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஆட்சியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள வனத்துறை பூங்காவை சீரமைக்கவும், பழங்குடினர் கலாச்சார மையத்தை முழுமையாக அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையில் தேவையான காலிப் பணியிடங்கள் கண்டறிந்து அவைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதிகளுக்கு டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும், அதனை வணிக ரீதியாக எடுத்து விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.