Wednesday, 01 July 2026, 11:39 AM | TamilnaduePaper
Published On: 2026-06-26 19:44:58 | Reporter: Admin
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக, 2017ஆம் ஆண்டு அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தலைமையை பிடிக்கும் போட்டியில் பல பிளவுகளாக அதிமுக பிளவுப்பட்டது. இதனையடுத்து கடந்த 9 வருடங்களாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார் எடப்பாடி பழனிசாமி, ஆனால் இந்த தேர்தலில் 3வது இடத்திற்கே அதிமுக தள்ளப்பட்டது. இதனையடுத்து கட்சி தலைமையின் மீதான அதிருப்தியால் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டனர். மேலும் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக மூத்த தலைவர்களான தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன்,காமராஜ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களின் பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டார் , மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தார். இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. அதே நேரம் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் பேச்சு நடைபெற்ற நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்தனர். ஆனால் இரு தரப்பும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளாமலும், எதிரும் புதிருமாக இருந்தனர். அந்த வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நேற்றைய தினம் புதிய பொறுப்புகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி, இதன் படி, துணை பொதுசெயலாளர் ஆக்கப்பட்டுள்ளார் வேலுமணி, அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் செ.மா. வேலுசாமிக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதே நேரம் வேலுமணிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தலைமை நிலைய செயலாளர் என்ற பொறுப்பு வகித்து வந்த அவருக்கு துணை பொதுசெயலாளர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய தங்கமணி, KP அன்பழகன், காமராஜ், கேசி வீரமணி , கிருஷ்ணமுரளி, திருத்தணி அரி உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக டம்மியாக அமைப்பு செயலாளர் பதவியானது வழங்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர், அருண்மொழி தேவன், NSN நடராஜ் உள்ளிட்டோருக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் CV சண்முகத்துக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய எம் எல் ஏக்கள் அனைவரும் டம்மி ஆக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அமைப்பு செயலாளர், கொள்கை பரப்பு இணை செயலாளர் போன்ற பொறுப்பு தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ளது எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி, இன்று காலை 11 மணிக்கு முக்கிய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தாக என்ன செய்வது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நீக்க பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுப்பதா? அல்லது தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவதா என ஆலோசிக்கவுள்ளனர். எனவே இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி அணி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.