Wednesday, 01 July 2026, 12:57 PM | TamilnaduePaper
Published On: 2026-06-26 19:37:58 | Reporter: Admin
ஹைதராபாத்: இலங்கை ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 333 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முதலாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று கலே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ஆயுஷ் பாண்டே ஆகியோர் களமிறங்கினர். இதில் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த ஆயுஷ் பாண்டே 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 12 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 22 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், மறுமுனையில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்சன் அபாரமாகச் சதமடித்து அசத்தினார். அதன்பின், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்சன் 19 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் துருவ் ஜூரல் மற்றும் ஷேக் ரஷீத் இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இவ்விருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தினர். இதன் மூலம், முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் கேப்டன் துருவ் ஜூரல் 68 ரன்களுடனும், ஷேக் ரஷீத் 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இலங்கை ஏ அணி தரப்பில் திலும் சுதீரா 2 விக்கெட்டுகளையும், சமிகா குணசேகரா மற்றும் ரவிந்து ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.