Wednesday, 01 July 2026, 12:57 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / Sports / Article

Sports

அயர்லாந்து vs இந்தியா டி20 தொடர்: போட்டி நேரங்களில் திடீர் மாற்றம்; காரணம் என்ன?

Published On: 2026-06-26 19:36:58 | Reporter: Admin

News Image

ஹைதராபாத்: மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி காரணமாக, இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் ஆட்டங்கள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி, நாளை பெல்பாஸ்ட்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திச் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ், சமீபத்திய ஃபார்ம் குறைவு காரணமாக டி20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி கவனம் ஈர்த்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் முதல்முறையாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் போன்ற முன்னணி வீரர்கள் ஏற்கனவே உள்ளதால், வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டி நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்பு திட்டமிடப்பட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இரண்டு போட்டிகளுமே இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கும் (அயர்லாந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணி) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமைந்துள்ளது. ஜூன் 28 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்குவதால், ரசிகர்கள் இரண்டு போட்டிகளையும் தடையின்றிப் பார்க்கும் வகையில் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு போட்டிகளுமே இந்திய நேரப்படி மாலை 6 மணிக்குத் தொடங்கும் நிலையில், போட்டிக்கான டாஸ் நிகழ்வு மாலை 5. 30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலையில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டி20 அணி: ஸ்ரேயாஸ் ஐயர், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷா கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, சூர்யன்ஷ் ஷெட்கே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூரியவன்ஷி. அயர்லாந்து டி20 அணி: லோர்கன் டக்கர் (கேப்டன்), ராஸ் அதிர், பென் கேலிட்ஸ், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஸ்டீபன் டோஹெனி, மேத்யூ ஹம்ப்ரிஸ், கேவின் ஹோய், மேத்யூ ஹாலார்ட், லியாம் மெக்கார்த்தி, ஜெய் மூந்த்ரா, ஹாரி டெக்டர், டிம் டெக்டர், ரூபன் வில்சன்.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7