Wednesday, 01 July 2026, 12:57 PM | TamilnaduePaper

TamilnaduePaper
Advertisement
Home / News / Article

News

இ20 எரிபொருள் ஆபத்தானதா? பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம்

Published On: 2026-06-26 19:34:59 | Reporter: Admin

News Image

புது டெல்லி: இ20 எரிபொருள் குறித்து வைரலாகும் வீடியோ ஆதாரமற்றது என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் 'இ20 எரிபொருள்' 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், நடப்பாண்டு ஏப்ரல் முதலே அது நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 20 சதவீதம் எத்தனால், 80 சதவீதம் பெட்ரோலின் கலவையே இ20 எரிபொருளாகும். இந்த நிலையில், இ20 எரிபொருள் வாகனங்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும், இந்த எரிபொருளை நிரப்பிய வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் தொட்டியில் எறும்புகள் மொய்ப்பது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் சமீப சில தினங்களாக வைரலாகி வருகிறது. இ20 எரிபொருளில் கரும்பு சாறு நேரடியாக களக்கப்படுவதாலேயே இதுபோல எறும்பு மொய்ப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, இணையத்தில் பரவி வரும் வீடியோ தவறானது என்றும், எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் பாதுகாப்பானது என்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், எத்தனால் சேர்க்கப்பட்ட பெட்ரோல் நுகர்வோருக்கு உகந்தது, அது பொருளாதார ரீதியாக பொதுமக்களுக்கு பயனளிக்கும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது. அத்துடன், பொதுமக்களிடையே தேவையற்ற கவலைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இணையத்தில் இந்த வீடியோ பரப்பப்பட்டு இருப்பதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, கரும்புச்சாறு நேரடியாக பெட்ரோலில் கலக்கப்படாது. எரிபொருளுடன் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் எத்தனால் பல்வேறு தொழில்துறை செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பெட்ரோலுடன் கலக்கப்படும் என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், எத்தனால் கரும்பு கழிவில் இருந்து மட்டுமே தயாரிக்கப்படுவதாக சிலர் சித்தரித்து வருகின்றனர். ஆனால், அது நெல் மற்றும் மக்காச்சோளம் போன்ற பிற விவசாய கழிவுகளில் இருந்தும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவசாய கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எத்தனால் நேரடியாக பெட்ரோலுடன் கலக்கப்படாமல், அதை நொதித்தல் முறைக்கு உட்படுத்தி எரிபொருளாக பயன்படுத்துவதற்கு ஏதுவான பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர், கடுமையான எரிபொருள் தரநிலைகளுக்கு உடப்படுத்தப்பட்டு தீவிர சோதனை செய்த பின்னரே பெட்ரோலுடன் அது கலக்கப்படுகின்றது. இதன் விளைவாக இந்த எத்தனாலானது தன்னுடைய சர்க்கரை தன்மையை முற்றிலுமாக இழந்து, முழு எரிபொருளாகவே மாறிவிடும். இதை வைத்தே எத்தனால் எந்த வகையிலும் வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல், இ20 பெட்ரோலை பயன்படுத்திய வாகனங்களுக்கு காப்பீடு பெற முடியாது என்றும் ஓர் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுவும் தவறான தகவல் என மறுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், இ20 எரிபொருளை பயன்படுத்தினாலும் மோட்டார் காப்பீட்டு திட்டம் செல்லுபடியாகும் என்பதை அறிக்கையாக வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

Read More

Logo

© 2026 TamilnaduePaper. Online news and ePaper 24/7